பென் ஸ்டோக்ஸ் பற்றி ஐ.சி.சி.யின் சமீபத்திய டுவிட்டால் சச்சின் ரசிகர்கள் கோபம்


பென் ஸ்டோக்ஸ் பற்றி ஐ.சி.சி.யின் சமீபத்திய டுவிட்டால் சச்சின் ரசிகர்கள் கோபம்
x
தினத்தந்தி 28 Aug 2019 11:28 AM GMT (Updated: 28 Aug 2019 11:28 AM GMT)

பென் ஸ்டோக்ஸ் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசியின் டுவிட்டர் பதிவு மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். அப்போது அவருக்கு இந்த விருதை இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்தார். இந்தப் படத்தை ஐசிசி தனது 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த வீரருடன் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்  எனக் கூறியிருந்தது.

உடனே இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்நிலையில் ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்தது. அதில், கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 என்ற டுவிட்டர் பக்கத்தில் அந்தப் பதிவை குறிப்பிட்டு நாங்கள் முன்பே சொன்னோம் எனப் பதிவிட்டுள்ளது. இதன் மூலம் சச்சின் தெண்டுல்கரைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா என்ற சர்ச்சையை மீண்டும் ஐசிசி கிளப்பியுள்ளது. 

இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ரசிகர் ஒருவர்,  சச்சின் தெண்டுல்கருக்கு இதைவிட பெரிய மரியாதையை ஐசிசி அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் 90களில் இந்திய கிரிக்கெட் அணியை தனது தோள்களில் சுமந்தவர் சச்சின் தெண்டுல்கர். இவர் பல முறை இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இதனைத் தெரிவிக்க டுவிட்டர் என்ற பக்கம் ஒன்றில்லை  எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், நீங்கள் கூறுவதால் நாங்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சச்சின் தெண்டுல்கர் தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர். அவருக்குப் பிறகு மற்ற வீரர்கள் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும் குவித்துள்ளார். மற்றொருவர் டெஸ்ட் போட்டிகளில் 3,479 ரன்களும், ஒருநாள் போட்டியில் 2,628 ரன்களும் குவித்துள்ளார். இது எவ்வாறு சாத்தியமாகும். சச்சின் அடித்துள்ள சதங்கள் குறித்து கூறவா? எனத் தெரிவித்துள்ளார்.


Next Story