வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி


வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 2 Sep 2019 9:19 PM GMT (Updated: 3 Sep 2019 11:34 PM GMT)

கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்டிலும் வெஸ்ட் இண்டீசை புரட்டியெடுத்த இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக தனதாக்கியது.

கிங்ஸ்டன்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 416 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 117 ரன்களும் எடுத்தன.

குறைந்த ஸ்கோரில் சுருண்டு வெஸ்ட் இண்டீஸ் ‘பாலோ-ஆன்’ ஆன போதிலும் ‘பாலோ-ஆன்’ கொடுக்காமல் இந்தியா 299 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடியது. 4 விக்கெட்டுக்கு 168 ரன்களுடன் ‘டிக்ளேர்’ செய்த இந்தியா 468 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 4-வது நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. முந்தைய நாள் பும்ராவின் ‘பவுன்சர்’ பந்து ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதால் பாதிப்புக்குள்ளான டேரன் பிராவோ (23 ரன்) அதன் தாக்கத்தை பேட்டிங்கின் போது உணர்ந்ததால் பாதியில் வெளியேறினார். இதையடுத்து பந்து தாக்கி தலையில் காயமடையும் வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை அனுமதிக்கும் புதிய விதிமுறைபடி ஜெர்மைன் பிளாக்வுட் சேர்க்கப்பட்டார்.

பிளாக்வுட்டும், ஷமார் புரூக்சும் 5-வது விக்கெட்டுக்கு இணைந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக சமாளித்து விளையாடினர். இந்த ஜோடியை ஸ்கோர் 159 ரன்களை எட்டிய போது, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிரித்தார். அவரது பந்து வீச்சில் பிளாக்வுட் (38 ரன், 72 பந்து) விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச் ஆனார். 30 ரன்னில் நோ-பால் அதிர்ஷ்டத்தால் கண்டம் தப்பிய ஷமார் புரூக்ஸ் 50 ரன்களில் ரன்-அவுட் செய்யப்பட்டார். பின்வரிசையில் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (39 ரன்) தவிர வேறு யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 12 வீரர்கள் பேட்டிங் செய்த முதல் நிகழ்வாக இந்த ஆட்டம் அமைந்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் 257 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்த இந்திய அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. முன்னதாக முதலாவது டெஸ்டில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முதல் இன்னிங்சில் சதமும் (111 ரன்), 2-வது இன்னிங்சில் அரைசதமும் (53 ரன்) அடித்த ஹனுமா விஹாரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக வென்ற 8-வது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வசப்படுத்திய இந்திய அணி இந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்தை தித்திப்புடன் நிறைவு செய்திருக்கிறது.

மேலும் இந்த வெற்றிக்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் 60 புள்ளிகள் இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா தற்போது 120 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளன.

Next Story