கிரிக்கெட்

டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்தார் பும்ரா + "||" + He finished 3rd in the Test rankings Bumrah

டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்தார் பும்ரா

டெஸ்ட் தரவரிசையில் 3-வது இடத்தை பிடித்தார் பும்ரா
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்,

ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்தார்.


ஐ.சி.சி. வெளியிட்டுள்ள பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (908 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (851 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 835 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும்.

1980-ம் ஆண்டு கபில்தேவ் தரவரிசையில் 877 புள்ளிகள் பெற்று இருந்தார். அவருக்கு பிறகு அதிக புள்ளிகளை குவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான். அதுவும் வெறும் 12 டெஸ்டுகளிலேயே பும்ரா இந்த இலக்கை எட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் (814 புள்ளி) 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 113 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடங்களில் முறையே நியூசிலாந்து (109 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (108), இங்கிலாந்து (105), ஆஸ்திரேலியா (98) ஆகிய அணிகள் உள்ளன.