ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், லபுஸ்சேன் அரைசதம்


ஆஷஸ் 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், லபுஸ்சேன் அரைசதம்
x
தினத்தந்தி 5 Sep 2019 12:22 AM GMT (Updated: 5 Sep 2019 12:22 AM GMT)

ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் சுமித், லபுஸ்சேன் ஆகியோர் அரைசதத்தை பதிவு செய்தனர்.

மான்செஸ்டர்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் சிடிலுக்கு பதிலாக மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்பட்டார். இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சொதப்பியது. டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றியும், மார்கஸ் ஹாரிஸ் 13 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் மார்னஸ் லபுஸ்சேனும், ஸ்டீவன் சுமித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். 2 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. மழை ஓய்ந்து ஆட்டம் தொடங்கிய போது லபுஸ்சேன் தொடர்ச்சியாக 4-வது அரைசதத்தை கடந்தார். ஸ்கோர் 144 ரன்களை எட்டிய போது லபுஸ்சேன் (67 ரன்) கிளன் போல்டு ஆனார். மறுமுனையில் ஸ்டீவன் சுமித்தும் அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 44 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்த போது மறுபடியும் மழை கொட்டியதால், அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஸ்டீவன் சுமித் 60 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக பலத்த காற்று வீசியதால் ஸ்டம்பு மீது பெய்ல்ஸ் இல்லாமல் சிறிது நேரம் ஆட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.


Next Story