கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ + "||" + Against England 4th Test Australian team 497 runs scored Declare

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்டில் ஸ்டீவன் சுமித்தின் அபார இரட்டை சதத்தின் உதவியோடு ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 44 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 60 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.


இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய ஸ்டீவன் சுமித் 65 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய ‘புல்டாஸ்’ பந்தை நேராக தட்டிவிட்டபோது, ஆர்ச்சரின் கையில் பட்டு பந்து நழுவிப்போய் விட்டது. இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுமித் நிலைத்து நின்று விளையாடி துரிதமாக ரன்கள் எடுத்தார். அவ்வப்போது பவுன்சர் தாக்குதலை இங்கிலாந்து பவுலர்கள் தொடுத்த போதிலும் அவரை அசைக்க முடியவில்லை. மறுமுனையில் டிராவிஸ் ஹெட் 19 ரன்னிலும், மேத்யூ வேட் 16 ரன்னிலும் வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து ஸ்டீவன் சுமித்துடன், கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சை சாதுர்யமாக சமாளித்த இருவரும் அணியின் ஸ்கோரை 300 ரன்களை கடக்க வைத்தனர். இதற்கிடையே சுமித் தனது 26-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இந்த தொடரில் அவர் அடித்த 3-வது சதம் இதுவாகும்.

செஞ்சுரிக்கு பிறகு ரன்வேட்டையை தீவிரப்படுத்திய சுமித்துக்கு மீண்டும் அதிர்ஷ்ட தேவதையின் கருணை கிடைத்தது. அவர் 118 ரன்களில் இருந்த போது ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்ஸ் கேட்ச் செய்தார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் பந்து வீசிய ஜாக் லீச், தனது காலை கிரீசுக்கு வெளியே வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்தது. இதனால் பெவிலியன் நோக்கி நடையை கட்டிய ஸ்டீவன் சுமித் திரும்ப அழைக்கப்பட்டு தொடர்ந்து பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெற்றார்.

சுமித்தின் மனஉறுதிமிக்க போராட்டம் அணியை வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்தது. ஸ்கோர் 369 ரன்களை எட்டிய போது டிம் பெய்ன் 58 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கம்மின்ஸ் 4 ரன்னில் வீழ்ந்தார். அவருக்கு பிறகு இறங்கிய மிட்செல் ஸ்டார்க், ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விரட்டியடித்து மிரட்டினார். இன்னொரு பக்கம் தூண் போல் நிலை கொண்டு அசத்திய ஸ்டீவன் சுமித் தனது 3-வது இரட்டை சதத்தை எட்டினார். மூன்று இரட்டை சதத்தையும் அவர் இங்கிலாந்துக்கு எதிராகவே அடித்துள்ளார்.

இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டீவன் சுமித் 211 ரன்களில் (319 பந்து, 24 பவுண்டரி, 2 சிக்சர்) கேப்டன் ஜோ ரூட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 126 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மிட்செல் ஸ்டார்க் 54 ரன்களுடனும் (58 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), நாதன் லயன் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

முதல் நாள் ஆட்டத்தின் போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை நோக்கி வசைபாடிய ஆஸ்திரேலிய ரசிகர்கள் இருவர் ‘ஆர்ச்சர்...உனது பாஸ்போர்ட்டை காட்டு’ என்று ஆவேசமாக கத்தினர். இதையடுத்து அந்த ரசிகர்கள் இருவரும் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜோப்ரா ஆர்ச்சரின் தாயார் வெஸ்ட் இண்டீசை சேர்ந்தவர். தந்தை இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டீவன் சுமித் அடித்த 11-வது சதம் இதுவாகும். இதன் மூலம் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சச்சின் தெண்டுல்கரை (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 சதம்) சமன் செய்தார். முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (இங்கிலாந்துக்கு எதிராக 19 சதம்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 13 சதம்), இங்கிலாந்தின் ஜாக் ஹாப்ஸ் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 12 சதம்) ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்னில் சுருண்டது.