கிரிக்கெட்

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு + "||" + Ashes 4th Test: England target 383 runs

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு
ஆஷஸ் 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
மான்செஸ்டர்,

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவன் சுமித்தின் இரட்டை சதத்தோடு 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்திருந்தது.


இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ‘பாலோ-ஆனை’ தவிர்க்க 298 ரன்கள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியுடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினர். விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 17 ரன்னிலும், முந்தைய டெஸ்டின் ஹீரோ பென் ஸ்டோக்ஸ் 26 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

அடுத்து வந்த ஜோஸ் பட்லர் பின்வரிசை வீரர்களின் ஒத்துழைப்போடு தங்கள் அணியை ‘பாலோ-ஆன்’ ஆபத்தில் இருந்து காப்பாற்றினார். பட்லர் (41 ரன்) கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 107 ஓவர்களில் 301 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து 196 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. டேவிட் வார்னர் தொடர்ந்து 3-வது முறையாக டக்-அவுட் ஆனார். மார்கஸ் ஹாரிஸ் (6 ரன்), லபுஸ்சேன் (11 ரன்), டிராவிஸ் ஹெட் (12 ரன்) உள்ளிட்டோரும் வரிசையாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் ஸ்டீவன் சுமித்தும், மேத்யூ வேட்டும் இணைந்து அணியை நிமிர வைத்தனர். துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்திய ஸ்டீவன் சுமித் (82 ரன், 92 பந்து, 11 பவுண்டரி) பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சித்து கேட்ச் ஆனார். மேத்யூ வேட் தனது பங்குக்கு 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 42.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த போது ‘டிக்ளேர்’ செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியுள்ளது.

ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதிலடி

ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஓராண்டு காலம் தடையை அனுபவித்தவர்கள் என்பதால் அதை வைத்து இங்கிலாந்து ரசிகர்கள் கேலி- கிண்டல் செய்கிறார்கள். ரசிகர்களின் பரிகாசத்தை கண்டு கோபமடையாமல் இருவரும் சாதுர்யமாக நடந்து கொள்கிறார்கள். நேற்று முன்தினம் வீரர்களின் ஓய்வறையில் இருந்து மைதானத்துக்கு படிக்கட்டில் வார்னர் இறங்கி வந்த போது, அவரை நோக்கி ஒரு ரசிகர், ‘மோசடி பேர் வழி’ என்று கத்தினார். இதை கவனித்த வார்னர் சிரித்த முகத்துடன் இரண்டு கை பெருவிரலை உயர்த்தி காட்டியபடி உற்சாகமாக சென்றார். ஜாலியான அவரது இந்த சைகை, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.