வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 9 Sep 2019 12:36 PM GMT (Updated: 10 Sep 2019 12:07 AM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சட்டோகிராம்,

வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 342 ரன்களும், வங்காளதேசம் அணி 205 ரன்களும் எடுத்தன. 137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.

இதன் மூலம் வங்காளதேச அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 44.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. கேப்டன் ஷகிப் அல்-ஹசன் 39 ரன்னுடனும், சவும்யா சர்கார் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மழையால் ஆட்டம் மதிய இடைவேளைக்கு பிறகு தான் தொடங்கியது. அதன் பிறகும் மழையால் ஆட்டம் தடைப்பட்டு தொடர்ந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி, ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், ஜாகீர்கான் ஆகியோரின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்தது. ஷகிப் அல்-ஹசன் (44 ரன்) ஜாகீர்கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அப்சர் ஜஜாயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மெஹிதி ஹசன் மிராஸ் (12 ரன்), தைஜூல் இஸ்லாம் (0), சவும்யா சர்கார் (15 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை ரஷித் கான் வீழ்த்தினார். 61.4 ஓவர்களில் வங்காளதேச அணி 173 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

3-வது டெஸ்டில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தபடியாக முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் 2-வது வெற்றியை ருசித்த அணி என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் பெற்றது. ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய ரஷித் கான் ஒரு அரைசதத்துடன் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியதுடன் ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார். டெஸ்ட் போட்டியில் விளையாடும் 10 நாட்டு அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனை வங்காளதேசத்துக்கு சொந்தமானது.

இந்த போட்டியின் மூலம் 20 வயது ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித்கான் சில சாதனை பட்டியலில் தனது பெயரை பதித்தார். அவை வருமாறு:-

* டெஸ்ட் போட்டியில் குறைந்த வயதில் அணியை முதல் வெற்றிக்கு அழைத்து சென்ற கேப்டன் என்ற பெருமையை ரஷித்கான் பெற்றார்.

* டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அறிமுகமான ஆட்டத்திலேயே அரைசதம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பையும் ரஷித்கான் தன்வசப்படுத்தினார்.

வெற்றிக்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித்கான் அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் போட்டிக்கு நாங்கள் புதியவர்கள் என்றாலும், சிறப்பாக செயல்பட்டு வங்காளதேச அணியை வீழ்த்தி இருக்கிறோம். இந்த பெருமை அனைத்தும் எங்கள் அணியின் பயிற்சி பணியாளர்களையே சாரும். எல்லா வீரர்களும் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் எங்களது பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினார்கள். இளம் வீரர்கள் தங்கள் தவறில் இருந்து விரைவாக பாடம் கற்று அருமையாக பந்து வீசினார்கள். இந்த போட்டிக்கு சிறப்பாக தயார் ஆனோம். எங்கள் வியூகத்தை சரியாக செயல்படுத்தினோம். டெஸ்ட் போட்டியில் முகமது நபிக்கு இது தான் கடைசி போட்டியாகும். அணிக்காக நிறைய பங்களிப்பை அளித்துள்ள அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதுடன், எனது ஆட்டநாயகன் விருதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story