தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மசூம்தார் நியமனம்


தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மசூம்தார் நியமனம்
x
தினத்தந்தி 10 Sep 2019 12:39 AM GMT (Updated: 10 Sep 2019 12:39 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அமோல் மசூம்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மூன்று 20 ஓவர், 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 15-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் 18-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் 22-ந் தேதியும் நடக்கிறது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டியில் புனேவில் அக்டோபர் 10-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19-ந் தேதியும் தொடங்குகிறது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளராக மும்பையை சேர்ந்த முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான 44 வயது அமோல் மசூம்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் இல்லாத மசூம்தார் 171 முதல் தர போட்டியில் விளையாடி 30 சதம் உள்பட 11,167 ரன்கள் குவித்துள்ளார். தான் விளையாடிய காலத்தில் மசூம்தார் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர் ஆவார். இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது குறித்து ஆலோசனை பெறுவதற்கு வசதியாக மசூம்தாரை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.

பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட மசூம்தார் அளித்த பேட்டியில், ‘என்னை கடந்த வாரம் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அணுகியது. பயிற்சியாளர் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். இது எனக்கு சிறந்த வாய்ப்பாகும். தென்ஆப்பிரிக்கா போன்ற சர்வதேச அணியுடன் இணைந்து பணியாற்ற இருப்பதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது மிகப்பெரிய சவால், பெரிய பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. இதனை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்வது கடும் சவாலானதாகும். தென்ஆப்பிரிக்க அணியில் சில சீனியர் வீரர்கள் விலக்கப்பட்டு இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அந்த அணி புதிய திட்டத்துடன் இருக்கும். நான் இதுவரை தென்ஆப்பிரிக்க அணி வீரர்களிடம் பேசவில்லை. தென்ஆப்பிரிக்க அணியின் முந்தைய இந்திய சுற்றுப்பயணத்தில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல. இது புதிய தொடராகும். தென்ஆப்பிரிக்க அணியினருடன் இணைந்து நன்றாக செயல்பட முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Next Story