முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது


முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது
x
தினத்தந்தி 10 Sep 2019 11:51 PM GMT (Updated: 10 Sep 2019 11:51 PM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.


* 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அக்டோபர் 20-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான சென்னையின் எப்.சி. அணியின் உதவி பயிற்சியாளராக சைபிரஸ் நாட்டை சேர்ந்த 43 வயதான கோன்ஸ்டன்டினோஸ் ரோஸ்டான்டிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கோன்ஸ்டன்டினோஸ் கருத்து தெரிவிக்கையில், ‘சென்னையின் எப்.சி. அணியினருடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சென்னையின் எப்.சி. அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.

* இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்டிராஸ், ஜெப்ரி பாய்காட் ஆகியோருக்கு இங்கிலாந்து அரசின் உயரிய விருது (வீரத்திருமகன்) வழங்கப்பட்டது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரசா மே இருவரையும் இந்த விருதுக்கு தேர்வு செய்து இருந்தார். ஜெப்ரி பாய்காட் 1998-ம் ஆண்டில் தனது பெண் தோழியை தாக்கிய வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவார். அவருக்கு அரசு விருது வழங்கியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

* பால்ராஜ்-சவுந்திரபாய் நினைவு கோப்பைக்கான 19-வது மாநில பால் பேட்மிண்டன் போட்டி திருவாரூரில் நடந்தது. ஆண்களுக்கான இந்த போட்டியில் 29 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் நடந்த இந்த போட்டியில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஓல்டு பாய்ஸ் பால் பேட்மிண்டன் கிளப் அணி (ஸ்ரீரங்கம்) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. செயின்ட் ஜோசப்ஸ் ‘ஏ’ அணி (சென்னை) 2-வது இடம் பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற ஓல்டு பாய்ஸ் பேட்மிண்டன் கிளப் அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற செயின்ட் ஜோசப்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது.

* இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு செயல்திறன் ஆய்வாளர் பணிக்கு ஆள் தேவை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தகுதி உள்ளவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை. குறைந்தபட்சமாக மாநில சீனியர் அணிக்கு 3 ஆண்டுகள் செயல்திறன் ஆய்வாளராக பணியாற்றி இருந்தால் தான் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐரோப்பிய (யூரோ) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் எஸ்தோனியாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் எஸ்தோனியாவை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய நெதர்லாந்து அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ரஷியாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி 5-வது வெற்றியை ருசித்தது.


Next Story