கிரிக்கெட்

டிக்வெல்லா, திசரா பெரேராவுக்கு கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி மறுப்பு + "||" + Diquella and Tisara Perera denied permission to play in the Caribbean Premier League

டிக்வெல்லா, திசரா பெரேராவுக்கு கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி மறுப்பு

டிக்வெல்லா, திசரா பெரேராவுக்கு கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி மறுப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய டிக்வெல்லா, திசரா பெரேராவுக்கு கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா, திசரா பெரேரா ஆகியோருக்கு கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.


இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்தது. இருப்பினும் இந்த போட்டியில் விளையாடுவது குறித்து வீரர்கள் தங்கள் விருப்பப்படி முடிவு எடுத்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.

பாதுகாப்பு அச்சம் காரணமாக மலிங்கா, கருணாரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, குசல் பெரேரா, தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, அகிலா தனஞ்ஜெயா, மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சன்டிமால் ஆகிய 10 வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த விஷயத்தில் டிக்வெல்லா, திசரா பெரேரா ஆகியோருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ‘செக்’ வைத்து இருக்கிறது.

வெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் திசரா பெரேரா தற்போது விளையாடி வருகிறார். இலங்கை அணிக்கு போட்டி இருந்தால் திரும்ப வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. பாகிஸ்தான் தொடரில் விளையாட மறுத்த திசரா பெரேரா வருகிற 15-ந் தேதி தொடங்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட அனுமதி கேட்ட டிக்வெல்லாவுக்கு அனுமதி அளிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘தேசிய அணியின் போட்டி இருக்கும் போது அதனை தான் வீரர்கள் தேர்வு செய்ய வேண்டும். தேசிய அணியின் பயணம் இருக்கும் போது அதனை விடுத்து வீரர்கள் யாரும் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதி அளிப்பது இல்லை என்பது கிரிக்கெட் வாரியத்தின் கொள்கை முடிவாகும். எங்கள் அணிக்கு போட்டி இருப்பதால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை’ என்று தெரிவித்தார்.