பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணிக்கு திரிமன்னே, ஷனகா கேப்டன்கள்


பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணிக்கு திரிமன்னே, ஷனகா கேப்டன்கள்
x
தினத்தந்தி 11 Sep 2019 11:25 PM GMT (Updated: 11 Sep 2019 11:25 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு திரிமன்னே, ஷனகா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. பாதுகாப்பு அச்சம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க இலங்கை ஒருநாள் அணியின் கேப்டன் கருணாரத்னே, 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியின் கேப்டனாக திரிமன்னேவும், 20 ஓவர் அணியின் கேப்டனாக தசுன் ஷனகாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுமுக வீரர்கள் 2 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இதற்கிடையில் இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்துள்ளனர் என்று பாகிஸ்தான் மந்திரி பவாத் ஹூசைன் சவுத்ரி தெரிவித்து இருந்த குற்றச்சாட்டை இலங்கை விளையாட்டு மந்திரி பெர்னாண்டோ மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளனர் என்று பாகிஸ்தான் மந்திரி கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது. 2009-ம் ஆண்டில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கருத்தில் கொண்டே சில வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துள்ளனர். வீரர்களின் முடிவை நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் வலுவான அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறோம். எங்கள் அணி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story