இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்


இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லுமா? - கடைசி டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 11 Sep 2019 11:51 PM GMT (Updated: 11 Sep 2019 11:51 PM GMT)

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.

லண்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டன் லாட்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லீட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து கழுத்தில் தாக்கியதால் 3 இன்னிங்சில் ஆடாத ஸ்டீவன் சுமித் 5 இன்னிங்சில் விளையாடி இரட்டை சதம் உள்பட 3 சதம், 2 அரைசதத்துடன் 671 ரன்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக லபுஸ்சேன் 291 ரன்கள் சேர்த்துள்ளார். டேவிட் வார்னர் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பேட் கம்மின்ஸ் (24 விக்கெட்), ஹேசில்வுட் (18 விக்கெட்), நாதன் லயன் (16 விக்கெட்) ஆகியோர் கலக்கி வருகிறார்கள். இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் பென் ஸ்டோக்ஸ் 2 சதம் உள்பட 354 ரன்னும், ரோரி பர்ன்ஸ் ஒரு சதம் உள்பட 323 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிராட் (19 விக்கெட்), ஜோப்ரா ஆர்ச்சர் (16 விக்கெட்) ஆகியோர் தங்களின் அசத்தலான வேகப்பந்து வீச்சால் எதிரணியினரை மிரட்டி வருகிறார்கள். காயம் அடைந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த போட்டி தொடரில் இருந்து முழுமையாக விலகி விட்டார். கடைசி டெஸ்ட் போட்டியில் ஜாசன் ராய், கிரேக் ஓவர்டனுக்கு பதிலாக சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார்கள் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் பவுலர்கள், ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் விக்கெட்டை விரைவில் வீழ்த்தாவிட்டால் அவர்கள் அணியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும் எனலாம்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடரை வெல்லும். எனவே இந்த போட்டியில் வெற்றிக்காக ஆஸ்திரேலிய அணியினர் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் கடைசி போட்டியில் வென்று சொந்த மண்ணில் தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி கடுமையாக போராடும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தாலும், நடப்பு சாம்பியன் என்ற முறையில் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story