தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2019 11:58 PM GMT (Updated: 11 Sep 2019 11:58 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி டெல்லியில் இன்று அறிவிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் வருகிற 15-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி மொகாலியில் 18-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் 22-ந் தேதியும் நடக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 10-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் அக்டோபர் 19-ந் தேதியும் தொடங்குகிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் மிடில் வரிசையில் களம் இறங்கி விளையாடி வருகிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா அணியில் இடம் பெற்று இருந்தாலும் ஆடும் லெவன் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் சரியாக செயல்படவில்லை. இதனால் அவரை நீக்கி விட்டு தொடக்க ஆட்டக்காரராக விளையாட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ரோகித் சர்மாவை டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்குவது குறித்து பரிசீலனை செய்வோம் என்று தேர்வு குழு தலைவர் பிரசாத் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

லோகேஷ் ராகுல் நீக்கம் செய்யப்பட்டால் பெங்கால் தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன் மாற்று தொடக்க ஆட்டக்காரராக இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. தொடக்க வரிசை ரேசில் குஜராத் வீரர் பியாங்க் பன்சால், பஞ்சாப் வீரர் சுப்மான் கில் ஆகியோரும் உள்ளனர். மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை தக்க வைத்து கொள்வார். மிடில் ஆர்டரில் புஜாரா, கேப்டன் விராட்கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி இடம் பெறுவார்கள். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு மீண்டும் திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட், விருத்திமான் சஹா ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் இடம் பெறுவார்கள். முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் உமேஷ் யாதவுக்கு இடம் கிடைக்கும். காயம் அடைந்த புவனேஷ்வர்குமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டாததால் அவர் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை. மாற்று வேகப்பந்து வீச்சாளராக நவ்தீப் சைனிக்கு இடம் கிடைக்கலாம். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.


Next Story