ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்


ஆஷஸ் கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:00 PM GMT (Updated: 12 Sep 2019 9:06 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

லண்டன், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஷஸ் டெஸ்ட்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டனர். இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (14 ரன்) கம்மின்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற சுமித்திடம் கேட்ச் ஆனார். இதன் பின்னர் ரோரி பர்ன்சும், கேப்டன் ஜோ ரூட்டும் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை நன்றாக ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

ரூட் 7 ஆயிரம் ரன்

ஜோ ரூட் 35 ரன்கள் எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 12-வது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். அணியின் ஸ்கோர் 103 ரன்களாக உயர்ந்த போது ரோரி பர்ன்ஸ் (47 ரன்) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (20 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. மறுமுனையில் 3 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய கேப்டன் ஜோ ரூட் 57 ரன்களில் (141 பந்து, 3 பவுண்டரி) கம்மின்சின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார்.

இதன் பின்னர் இங்கிலாந்து அணி வெகுவாக தடுமாற்றத்திற்கு உள்ளானது. அடுத்த 3 விக்கெட்டுகளை வரிசையாக மிட்செல் மார்ஷ் காலி செய்தார்.

பட்லர் அதிரடி

ஒரு பக்கம் விக்கெட் சரிந்ததால் இறுதி கட்டத்தில் ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 64 ரன்களுடனும் (84 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஜாக் லீச் 10 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Next Story