முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை


முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்; தொடர்ச்சியாக 12-வது வெற்றி பெற்று சாதனை
x
தினத்தந்தி 15 Sep 2019 11:08 PM GMT (Updated: 15 Sep 2019 11:08 PM GMT)

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12-வது வெற்றியை சுவைத்து சாதனை படைத்தது.

டாக்கா,

வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்றிரவு நடந்த 3-வது லீக்கில் வங்காளதேச அணி, ஆப்கானிஸ்தானை சந்தித்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (5.5 ஓவர்) இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் அஸ்ஹார் ஆப்கனும், முகமது நபியும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அஸ்ஹார் ஆப்கன் 40 ரன் எடுத்தார். சிக்சர் மழை பொழிந்து வங்காளதேச பவுலர்களை திணறடித்த முகமது நபி 84 ரன்கள் (54 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

அடுத்து களம் இறங்கிய வங்காளதேச அணி சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 139 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. அதிகபட்சமாக மக்முதுல்லா 44 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஷகிப் அல்-ஹசன் (15 ரன்), விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (5 ரன்) சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் 15 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 12-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தொடர்ந்து அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பும் இச்சாதனை அந்த அணி வசம் தான் (தொடர்ந்து 11 வெற்றி) இருந்தது.

இந்த தொடரில் நாளை மறுதினம் நடக்கும் 4-வது லீக்கில் வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.


Next Story