இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா? - கங்குலி பதில்


இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா? - கங்குலி பதில்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:54 PM GMT (Updated: 17 Sep 2019 11:54 PM GMT)

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா என்பது குறித்து கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.

கொல்கத்தா,

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை அடைவதற்கு உங்களுக்கு ஆசை இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, ‘முதலில் ரவிசாஸ்திரி தனது பயிற்சி காலத்தை நிறைவு செய்யட்டும். அதன் பிறகு நாம் அடுத்த பயிற்சியாளர் பற்றி சிந்திக்கலாம். எது எப்படியோ நான் ஏற்கனவே ஒரு பயிற்சியாளர் தான். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக கடந்த சீசனில் பயிற்சியாளர் பணியை கவனித்தேன். கடந்த 7 ஆண்டுகளாக டெல்லி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், எனது பயிற்சி காலத்தில் அந்த அணி ‘பிளே-ஆப்’ சுற்று வரை முன்னேறியது’ என்றார்.

மேலும் கங்குலி கூறுகையில், ‘இந்திய மூத்த வீரர் டோனி தனது ஓய்வு குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளார். இந்த விஷயத்தில் தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்திய கிரிக்கெட்டில் இவர்கள் முக்கியமானவர்கள். அதனால் டோனியின் எதிர்காலம் குறித்து இவர்கள் முடிவு செய்யலாம்’ என்றார்.

விராட் கோலி-ஸ்டீவன் சுமித் ஒப்பீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘இத்தகைய கேள்விகள் பதிலுக்கு உகந்தவை அல்ல. இது ஆட்டத்திறன் பற்றியது. விராட் கோலி தற்போது உலகின் சிறந்த வீரராக திகழ்கிறார். அது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. ஸ்டீவன் சுமித்தை பொறுத்தவரை சாதனைகளே அவரை பற்றி பேசும். இப்போதே 26 டெஸ்ட் சதங்கள் அடித்திருப்பது வியப்புக்குரியது’ என்றார்.


Next Story