கிரிக்கெட்

‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம்இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி + "||" + Indian player Deepak Sahar Interview

‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம்இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி

‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம்இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி
20 ஓவர் கிரிக்கெட்டில் பீல்டிங் கட்டுப்பாடு உள்ள ‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினமானது என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கூறினார்.
மொகாலி,

மொகாலியில் நேற்று முன்தினம் இரவு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை இந்திய அணி 19 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. தனது 22-வது அரைசதத்தை அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் விளாசி (52 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. தென்ஆப்பிரிக்கா சிறப்பான தொடக்கம் கண்டது. நமது பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசி அவர்களை கட்டுப்படுத்தி ஆட்டத்தை நமது பக்கம் திருப்பினர். 20 ஓவர் உலக கோப்பை போட்டியையொட்டி புதுமுக வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதிக்கிறோம். நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பார்க்கிறோம்’ என்றார்.

தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதன் ரகசியம் என்ன என்று கோலியிடம் கேட்ட போது, ‘இந்தியாவுக்காக ஆடுவது தான் காரணம்’ என்று குறிப்பிட்டார். எனது தேசத்துக்காக விளையாடுவது பெருமை அளிக்கக்கூடிய ஒன்றாகும். எந்த வடிவிலான போட்டியாக இருந்தாலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதை நான் செய்வேன்’ என்றார்.

தீபக் சாஹர் பேட்டி

இந்த ஆட்டத்தில் 4 ஓவர் களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான தீபக் சாஹர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘பவர்-பிளே’யில் (முதல் 6 ஓவர் பகுதி) எனது பந்து வீச்சை எப்படி மேம்படுத்திக் கொண்டேன் என்பது தெரியவில்லை. ஆனால் இந்திய அணிக்காக விளையாடும் போது இதை செய்து தான் ஆக வேண்டும். ‘பவர்- பிளே’யில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது கடினமானது.

‘பவர்-பிளே’யுடன் ஒப்பிடும் போது இறுதிகட்டத்தில் பந்து வீசுவது தான் எனக்கு எளிதாக இருக்கிறது. ஏனெனில் கடைசி கட்டத்தில் 5 பீல்டர்கள் வெளிவட்டத்தில் நிற்பார்கள். அதனால் பந்து வீச்சில் வித்தியாசத்தையும் காட்ட முடியும். பெரும்பாலும் இறுதிகட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் யார்க்கர் அல்லது வேகம் குறைந்த பந்துகள் வரும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் பவுன்சராகவோ அல்லது பந்தை விரல்களால் சுண்டி விடுவது போல் வீசினாலோ (நக்கிள் பந்து) அது பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியமளிக் கும். பேட்ஸ்மேன்கள் என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை கணித்து அதற்கு ஏற்ப பந்து வீச வேண்டும்.

ஐ.பி.எல். அனுபவம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறேன். சென்னையில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு உகந்தவை. இங்குள்ள ஆடுகளத்தில் புற்கள் இருக்காது. அதிகபட்சமாக ஒரு ஓவர் தான் ‘ஸ்விங்’ ஆகும். பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காத இங்கு சிறப்பாக செயல்பட்டால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும் என்று நம்பினேன். இது தான் எனது பந்து வீச்சை மேம்படுத்த உதவியது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து கேட்கிறீர்கள். அதற்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அந்த அணியில் எனக்கு இடம் இருக்குமா? என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அணியில் யாருக்கும் இடம் உறுதி கிடையாது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும், இதை எனது கடைசி ஆட்டமாக பாவித்து விளையாடுகிறேன். அணியில் இடம் பிடிக்க பல வீரர்கள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. அதனால் தொடர்ந்து அணியில் நீடிக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இத்தகைய போட்டியால் தான் இந்திய கிரிக்கெட் உயர்ந்த நிலையில் இருக்கிறது. விராட் கோலி தொடர்ச்சியாக எப்படி ரன்கள் குவிக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அடுத்த லெவல் வீரர் ஆவார்.

இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

பவுமா கருத்து

தோல்விக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா வீரர் பவுமா அளித்த பேட்டியில், ‘முதல் 10-12 ஓவர்களில் நாங்கள் உண்மையிலேயே நன்றாக விளையாடினோம். டேவிட் மில்லர் 13-வது ஓவரில் வந்த போது, நாங்கள் மிகவும் வலுவான நிலையில் இருந்தோம். 180 ரன்கள் வரை எடுப்போம் என்று எதிர்பார்தோம். அது சவாலான ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் அதே உத்வேகத்துடன் கடைசி வரை பயணிக்க இயலவில்லை.

இந்தியா பலம் வாய்ந்த அணி என்பதில் சந்தேகமில்லை. அதற்காக தோற்கடிக்க முடியாத அணி அல்ல. ஒரு பகுதியில் ஏற்பட்ட பேட்டிங் பாதிப்பு பின்னடைவை ஏற் படுத்திவிட்டது’ என்றார்.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) பெங்களூருவில் நடக்கிறது.