கேப்டனாக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது - கோலி குறித்து கவுதம் கம்பீர் கருத்து


கேப்டனாக இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது - கோலி குறித்து கவுதம் கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 20 Sep 2019 11:37 PM GMT (Updated: 20 Sep 2019 11:37 PM GMT)

கேப்டனாக விராட் கோலி இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.


* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி நேற்று அளித்த பேட்டியில், ‘20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை நெருக்கடி பேட்ஸ்மேன்களுக்கு தான் அதிகம். ஏனெனில் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் அதிரடி பேட்டிங்கைத் தான் விரும்புகிறார்கள். அவர்களை திருப்திப்பட வேண்டிய நிலையில் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சாளர்களின் பணி, திட்டத்தை களத்தில் சரியாக செயல்படுத்தி அந்த கொண்டாட்டத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் அவ்வளவு தான்’ என்றார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் ஒரு கேப்டனாக அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் கோலி கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுகிறார் என்றால் அவருடன் ரோகித் சர்மா இருப்பதும், டோனி நீண்ட காலம் உடனிருந்ததும் தான் முக்கிய காரணம். அவர்களது அனுபவம் கோலிக்கு உதவிகரமாக இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் தனியாக அணியை வழிநடத்தி, அதுவும் மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாத போது தான் உங்களது உண்மையான கேப்டன்ஷிப் திறமை கவனிக்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா செய்த சாதனைகளையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி செய்த சாதனைகளையும் பாருங்கள். இவர்களுடன் விராட் கோலியை கேப்டனாக கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தால் கேப்டன்ஷிப்பின் தனித்துவம் உங்களுக்கே தெரியும்’ என்றார்.

* பாதுகாப்பு அச்சம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் 10 முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். இதனால் 2-ம் தர இலங்கை அணியே அங்கு அனுப்பப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கூறுகையில், ‘பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இலங்கை முன்னணி வீரர்கள் பின்வாங்கியது மிகவும் வேதனை அளித்தது. தங்களது தேசிய அணிகளுடன் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மறுக்கும் வெளிநாட்டு வீரர்களை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்.) பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதிக்க வேண்டும்’ என்றார்.

* இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தினமும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அவரது மனைவி சாக்‌ஷி ஆதங்கப்பட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ராஞ்சியில் தினமும் 4 முதல் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நேற்றும் (நேற்று முன்தினம்) நீண்ட நேரம் மின்சாரம் இல்லை. அதற்குரிய காரணமும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினையை சரி செய்வார்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

* ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய ஆக்கி அணி வருகிற 26-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு முன்கள வீரர் லலித்குமார் உபாத்யாய், ரூபிந்தர்பால் சிங் ஆகியோர் திரும்பி உள்ளனர். ஓய்வில் இருந்த கோல்கீப்பர் ஸ்ரீஜேசும் அணியில் இணைகிறார்.


Next Story