ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்: ஜிம்பாப்வே அணிக்கு ஆறுதல் வெற்றி


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்: ஜிம்பாப்வே அணிக்கு ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 21 Sep 2019 12:10 AM GMT (Updated: 21 Sep 2019 12:10 AM GMT)

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது.

சட்டோகிராம்,

வங்காளதேசத்தில் நடந்து வரும் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரமனுல்லா குர்பாஸ் (61 ரன்), ஹஸ்ரத்துல்லா ஜசாய் (31 ரன்) நல்ல தொடக்கம் அளித்த போதிலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி விட்டனர். வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் போபு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஹாமில்டன் மசகட்சா 71 ரன்கள் (42 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இந்த போட்டியுடன் 36 வயதான மசகட்சா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட ஜிம்பாப்வேக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 9-வது முறையாக 20 ஓவர் போட்டியில் மோதிய ஜிம்பாப்வே அதில் பெற்ற முதல் வெற்றி இது தான். அத்துடன் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த ஆப்கானிஸ்தானின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது. இன்று நடக்கும் கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தான் அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.


Next Story