20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - இந்திய வீரர் குல்தீப் யாதவ் பேட்டி


20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை - இந்திய வீரர் குல்தீப் யாதவ் பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2019 12:25 AM GMT (Updated: 21 Sep 2019 12:25 AM GMT)

20 ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதால் கவலைப்படவில்லை என இந்திய வீரர் குல்தீப் யாதவ் கூறினார்.

மைசூரு,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கழற்றி விடப்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் நான் இதுவரை நிறைவாக செயல்பட்டுள்ளேன். வெள்ளை நிற பந்தில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) நான் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். கடைசி இரண்டு 20 ஓவர் தொடர்களில் என்னை தேர்வு செய்யாதது குறித்து கவலைப்படவில்லை. ஒரு வேளை எனக்கு ஓய்வு தேவை என்று தேர்வாளர்கள் கருதி இருக்கலாம். அணி நிர்வாகம் சில மாற்றம் தேவை என்று நினைத்து இருக்கலாம். அவர்களின் முடிவை நான் மதிக்கிறேன். இதில் புகார் சொல்ல எதுவும் இல்லை. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட இதை ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன்.

குறுகிய வடிவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி விட்டு திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது போதிய பயிற்சி பெறாத நிலையில் அதில் சாதிப்பது கடினம். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, நான் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிக்கிறோம். இதில் சரியான கலவையில் வீரர்களை தேர்வு செய்வது சவாலான விஷயம். எது எப்படியோ கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.

24 வயதான குல்தீப் யாதவ் 6 டெஸ்டில் 24 விக்கெட்டுகளும், 53 ஒரு நாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும், 18 இருபது ஓவர் போட்டிகளில் 35 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.


Next Story