கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா + "||" + India looking to seal series against South Africa

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடக்கிறது.
பெங்களூரு,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மொகாலியில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

2-வது ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் அசத்தியது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 170 ரன்களை தாண்டுவது போல் சென்ற நிலையில் இந்திய பவுலர்களின் அபாரமான பந்து வீச்சால் 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அட்டகாசமான பேட்டிங்கின் (72 ரன்) மூலம் சிக்கலின்றி எட்டிப்பிடித்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டின் பேட்டிங் மட்டும் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் 4 ரன்னில் கேட்ச் ஆனார். ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து அடிப்பதில் அவருக்கு இன்னும் கூடுதல் கவனம் தேவையாகும். மற்றபடி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள இந்திய அணியில் அனேகமாக மாற்றம் ஏதும் இருக்காது.

போதிய அனுபவம் இல்லாத வீரர்களை கொண்ட தென்ஆப்பிரிக்க அணியில் மொகாலி ஆட்டத்தில் கேப்டன் குயின்டான் டி காக் (52 ரன்), டெம்பா பவுமா (49 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. எதிர்பார்க்கப்பட்ட வான்டெர் துஸ்செனும் (1 ரன்), டேவிட் மில்லரும் (18 ரன்) அதிக நேரம் நிலைக்கவில்லை. அவர்கள் தவறுகளை திருத்திக்கொண்டு தொடரை சமன் செய்ய எல்லா வகையிலும் தீவிரம் காட்டுவார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

தென்ஆப்பிரிக்க அணியின் துணை கேப்டன் வான்டெர் துஸ்சென் நேற்று அளித்த பேட்டியில், ‘இது இளம் வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் மனம் தளராமல் கடைசிவரை கடுமையாக போராடும் தென்ஆப்பிரிக்காவின் பாரம்பரிய குணாதிசயத்துடன் மோதுவதற்கே இங்கு வந்துள்ளோம். இந்த தொடர் கடினமாக இருக்கும் என்பதை அறிவோம். உலகின் பலம் வாய்ந்த அணிகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. துரதிர்ஷ்டவசமாக முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு விட்டது. ஆனாலும் தொடரை சமன் செய்ய எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது.

2-வது ஆட்டத்தை எடுத்துக் கொண்டால் நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். எல்லா பெருமையையும் கடைசி கட்டத்தில் எங்களை கட்டுப்படுத்திய இந்திய பவுலர்களையே சாரும். இந்த தோல்வியில் இருந்து நிறைய கற்று இருக்கிறோம். முந்தைய ஆட்டத்தை விட இந்த முறை சிறப்பாக தயாராகி உள்ளோம். தவான், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டக்காரர்கள். அதிலும் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது சர்வதேச 20 ஓவர் போட்டி ரன் குவிப்பில் முன்னணியில் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்துவது எங்களது பவுலர்களுக்கு மிகப்பெரிய சவால். நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் இத்தகைய வீரர்களை அடக்க வேண்டும்.’ என்றார்.

இந்த மைதானம் கொஞ்சம் சிறியது. பந்து பேட்டில் சரியாக ‘கிளிக்’ ஆனால் எல்லைக்கோட்டுக்கு பறந்து கொண்டே இருக்கும். எனவே ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

40 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 6 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 4-ல் விளையாடியுள்ள இந்திய அணி 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2017-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் தான் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்டுகளை சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, தீபக் சாஹர்.

தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், குயின்டான் டி காக் (கேப்டன்), பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பிரிட்டோரியஸ், பெலக்வாயோ, ஜோர்ன் போர்ச்சுன் அல்லது பீரன் ஹென்ரிக்ஸ், காஜிசோ ரபடா, அன்ரிச் நார்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. 


‘இளம் வீரர்களுக்கு உதவி செய்கிறோம்’ - தவான்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பெங்களூருவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் சுழற்பந்து வீச்சில் உண்மையிலேயே நன்றாக செயல்படுகிறார். தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். பேட்ஸ்மேன்களுக்கும் எளிதில் ரன் எடுக்க விடாமல் நெருக்கடி கொடுக்கிறார். கட்டுக்கோப்புடன் பலவிதமாக பவுலிங் செய்கிறார்.

தீபக் சாஹர் கூட இரு முனையிலும் பந்தை ஸ்விங் செய்கிறார். பந்து வீச்சில் வேகமும் இருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்கள் தயாராகி வலுப்படுத்திக் கொள்வதற்கு இது அருமையான களமாக அமைந்துள்ளது. இளம் வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள அணி நிர்வாகம் நீண்ட வாய்ப்பு வழங்கும் என்று நம்புகிறேன்.

என்னை போன்ற மூத்த வீரர்கள், இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கிறோம். ரிஷாப் பண்ட் பேட்டிங் செய்ய இறங்கும் போதோ அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் வரும் போதோ அவர்களுடன் பேசி பதற்றமடையாமல் இயல்பாக விளையாடுவதற்குரிய ஆலோசனைகளை வழங்குகிறோம். குறிப்பிட்ட தருணத்தில் என்ன தேவை என்பதை சிந்திக்க வைக்கிறோம். நான் பேட்டிங் செய்யும் போது கூட உடன் ரோகித் சர்மாவோ அல்லது கேப்டன் விராட் கோலியோ இருந்தால் அவர்களுடன் தொடர்ந்து பேசுவேன். களத்தில் கலந்துரையாடல் மிகவும் முக்கியம். இளம் வீரர்கள் எந்த விஷயத்தை குறித்து எங்களுடன் பேச விரும்பினாலும், உதவுவதற்கு நாங்கள் எப்போதும் இருக்கிறோம். இவ்வாறு ஷிகர் தவான் கூறினார்.தொடர்புடைய செய்திகள்

1. மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
சென்னையில் நடந்து வரும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து தடுமாறியது.
2. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு
சென்னையில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி 488 ரன்கள் குவித்தது.
3. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 3-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
4. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரையும் கைப்பற்றியது
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டிலும் எளிதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5. மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 149 ரன்னில் ஆல்-அவுட்
ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.