ரிஷாப் பண்டை 4-வது வரிசைக்கு பிறகு களம் இறக்க வேண்டும் - லட்சுமண் சொல்கிறார்


ரிஷாப் பண்டை 4-வது வரிசைக்கு பிறகு களம் இறக்க வேண்டும் - லட்சுமண் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 Sep 2019 11:32 PM GMT (Updated: 23 Sep 2019 11:32 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியில் 4-வது வரிசைக்கு பிறகு ரிஷாப் பண்டை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் யோசனை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் பிரச்சினை நீடித்து வருகிறது. 4-வது வீரராக யாரை களம் இறக்கலாம் என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளை எடுத்தாலும் அதற்கான விடை என்னும் கிடைத்தபாடில்லை.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய இளம் வீரர் ரிஷாப் பண்ட் இயற்கையாகவே ஆக்ரோஷமாக ஷாட்களை அடிக்கக்கூடியவர். ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகையில் 4-வது வரிசையில் அவர் நன்றாக ரன்கள் எடுத்தார். துரதிருஷ்டவசமாக சர்வதேச போட்டியில் அவரால் 4-வது வரிசையில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை.

எல்லா வீரர்களுமே மோசமான கால கட்டத்தை தாண்ட வேண்டியது வரும். அடித்து ஆடும் ஆற்றல் படைத்த அவரால் சர்வதேச போட்டியில் உடனடியாக தனது திறனை பிரதிபலிக்க முடியவில்லை. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் ஒன்றிரண்டு ரன்களை ஓடி எடுக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவருடைய ஷாட் தேர்வு சிறப்பானதாக அமையவில்லை.

4-வது வரிசையில் ரன் எடுக்கும் வழிமுறை ரிஷாப் பண்ட்க்கு இன்னும் தெரியவில்லை. அவரை 5-வது மற்றும் 6-வது வரிசையில் களம் இறக்கி சுதந்திரமாக விளையாட அணி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். 4-வது வரிசையில் அனுபவம் வாய்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யரை விளையாட வைக்கலாம். இந்திய கிரிக்கெட்டுக்கு அதிக பங்களிப்பை அளித்த டோனிக்கு மாற்றாக ரிஷாப் பண்ட் அணியில் இடம் பிடித்து இருப்பதால் அவருக்கு நிறைய நெருக்கடி இருக்கும். ரிஷாப் பண்ட் தனது நம்பிக்கையை மீட்டெடுக்க அவரை 5-வது அல்லது 6-வது வரிசையில் விளையாட வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு வி.வி.எஸ்.லட்சுமண் தெரிவித்தார்.


Next Story