‘ரிஷாப் பண்டுக்கு கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ - யுவராஜ்சிங் சொல்கிறார்


‘ரிஷாப் பண்டுக்கு கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ - யுவராஜ்சிங் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:58 PM GMT (Updated: 24 Sep 2019 11:58 PM GMT)

‘இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டுக்கு கேப்டன் விராட் கோலி வழிகாட்டியாக இருக்க வேண்டும்’ என்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் 21 வயதான ரிஷாப் பண்டை மூத்த வீரர் டோனிக்கு மாற்றாக தயார்படுத்துவதில் இந்திய அணி நிர்வாகம் தீவிரம் காட்டுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமைக்குரிய ரிஷாப் பண்ட் சமீப காலமாக சொதப்பி வருகிறார். கடைசியாக ஆடிய சில சர்வதேச போட்டிகளை எடுத்துக் கொண்டால் 20, 0, 7, 24, 27, 4, 19 ரன் வீதம் மட்டுமே எடுத்துள்ளார். அவர் அதிரடி காட்டுவதில் கில்லாடி என்றாலும் ஷாட்டுகளை தேர்வு செய்து ஆடும் விதத்தில் மெத்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் ரிஷாப் பண்டுக்கு முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் ஆதரவுகரம் நீட்டியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவராஜ்சிங் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-

ரிஷாப் பண்ட் விஷயத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. தேவையில்லாமல் அவரை விமர்சித்து வருகிறார்கள். ரிஷாப் பண்டிடம் வியப்புக்குரிய திறமை இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய திறன் கொண்டவர். அவரிடம் இருந்து முழுமையான திறமையை பெற வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவர், அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி செயல்பட வேண்டும். ஆனால் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால், அவரது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர முடியாது.

எனவே கேப்டனும், பயிற்சியாளரும் அவருக்கு மனரீதியாக தகுந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி அவர் குறித்து அணி நிர்வாகத்தினர் ஊடகத்திடம் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மூத்த வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து விவாதிப்பது நியாயமற்றது. அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய பங்களிப்பு அளித்துள்ளார். அவர் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன். எனவே முடிவு எடுப்பதில் அவருக்கு போதுமான காலஅவகாசம் அளிக்க வேண்டும். அவர் எப்போது ஓய்வு பெற விரும்புகிறார் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அது தான் இப்போது அவரது முடிவு என்றால், அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது அவசியமாகும்.



 


ரிஷாப் பண்டை டோனியுடன் ஒப்பிட்டு பார்ப்பது நியாயமற்றது. டோனி ஒரே நாளில் சாதனை வீரராக மாறிவிடவில்லை. அணியின் தனி அடையாளமாக உருவெடுக்க நிறைய காலம் பிடித்தது. இதே போல் ரிஷாப் பண்டும் முத்திரைபதித்து டோனியை நெருங்குவதற்கு குறிப்பிட்ட காலம் பிடிக்கும். அதனால் பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.


Next Story