வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண வாருங்கள் - ரசிகர்களுக்கு, பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு


வரலாற்று சிறப்புமிக்க போட்டியை காண வாருங்கள் - ரசிகர்களுக்கு, பாகிஸ்தான் கேப்டன் அழைப்பு
x
தினத்தந்தி 25 Sep 2019 11:42 PM GMT (Updated: 25 Sep 2019 11:42 PM GMT)

சொந்த மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்க்க திரண்டு வரும்படி ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அழைப்பு விடுத்துள்ளார்.

கராச்சி,

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வீரர்கள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பினர். இந்த சம்பவம் எதிரொலியாக பெரிய அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுக்கின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி முழுமையான தொடரில் (3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி) பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அசம்பாவித்தை தவிர்க்க இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஜனாதிபதிக்கு அளிக்க கூடிய அளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அச்சம் காரணமாக மலிங்கா, கருணாரத்னே, மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் அங்கு செல்ல மறுத்து விட்ட நிலையில் இரண்டாம் தர இலங்கை அணியே பாகிஸ்தான் மண்ணில் கால் பதித்துள்ளது. இலங்கை ஒரு நாள் போட்டி அணிக்கு திரிமன்னேவும், 20 ஓவர் அணிக்கு ஷனகாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இதையொட்டி பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘உள்நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் இரு நாட்டு ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்த இருப்பது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். எப்போது விளையாடப்போகிறோம் என்று மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறேன். மைதானத்தில் நான் அடியெடுத்து வைக்கும் போது, ஒட்டுமொத்த அரங்கமும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் என்று நம்புகிறேன். அவர்கள் என்னை மட்டுமல்ல, இரு நாட்டு அணியினரையும் உற்சாகப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எந்த ஒரு விளையாட்டுக்கும் ரசிகர்கள் தான் ஆணிவேர். அவர்களின் ஆதரவும், ஆர்ப்பரிப்பும் அணிகளுக்கு கூடுதல் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

2009-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு கராச்சியில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் நடக்கிறது. இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கும்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் உள்ளூர் ரசிகர்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் அடுத்த தலைமுறை ரசிகர்களிடம் கராச்சியில் சர்வதேச தொடர் நடந்த போது நாங்களும் அங்கு இருந்தோம் என்று பெருமையோடு சொல்ல முடியும்’ என்றார்.


Next Story