கிரிக்கெட்

கிரிக்கெட் வாரிய லெவன்-தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது + "||" + Cricket Board XI-South Africa clash 3-day cricket begins today

கிரிக்கெட் வாரிய லெவன்-தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது

கிரிக்கெட் வாரிய லெவன்-தென் ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி கிரிக்கெட் - இன்று தொடங்குகிறது
இந்திய கிரிக்கெட் வாரிய லெவன்-தென்ஆப்பிரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.
விஜயநகரம்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் அடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா பங்கேற்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.


டெஸ்ட் தொடருக்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இன்று தொடங்குகிறது.

கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக உள்ளார். குறுகிய வடிவிலான போட்டிகளில் சாதனை படைத்து வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடி வருகிறார். லோகேஷ் ராகுலின் தடுமாற்றமும், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிரித்வி ஷாவுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும் இப்போது ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் கதவு மறுபடியும் திறந்துள்ளது.

தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக ஆட வைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அந்த தொடருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு இந்த பயிற்சி களம் அருமையான வாய்ப்பாகும். பிலாண்டர், நிகிடி, ரபடா போன்ற அதிவேக பவுலர்களும், கேஷவ் மகராஜ், செனுரன் முத்துசாமி உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களும் தென்ஆப்பிரிக்க அணியில் உள்ளனர். அவர்களை சமாளித்து ரன்கள் குவித்து விட்டால், அது ரோகித் சர்மாவுக்கு திடமான நம்பிக்கையை கொடுக்கும்.

அதனால் இந்த பயிற்சி ஆட்டத்தில் ரோகித்சர்மா மீது தான் அனைவரின் கவனமும் பதிந்து இருக்கும். இதே போல் பும்ராவுக்கு பதிலாக அழைக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவும் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தென்ஆப்பிரிக்க அணியும் பயிற்சி ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:-

கிரிக்கெட் வாரிய லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங் பன்சால், ஈஸ்வரன், கருண் நாயர், சித்தேஷ் லாட், கே.எஸ்.பாரத், ஜலஜ் சக்சேனா, தர்மேந்திரசிங் ஜடேஜா, அவேஷ் கான், இஷன் போரெல், ஷர்துல் தாகுர், உமேஷ் யாதவ்.

தென்ஆப்பிரிக்கா: பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டெம்பா பவுமா, டி புருன், குயின்டான் டி காக், டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, கேஷவ் மகராஜ், மார்க்ராம், செனுரன் முத்துசாமி, நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் பிலாண்டர், டேன் பிய்ட், ரபடா, ஹென்ரிச் கிளாசன்.

காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால், இந்த பயிற்சி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.