இரட்டை ஆதாய புகார்: கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பதவியை ராஜினாமா செய்தார், சாந்தா


இரட்டை ஆதாய புகார்: கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பதவியை ராஜினாமா செய்தார், சாந்தா
x
தினத்தந்தி 29 Sep 2019 11:35 PM GMT (Updated: 29 Sep 2019 11:35 PM GMT)

இரட்டை ஆதாய புகார் எதிரொலியாக, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி பதவியை சாந்தா ராஜினாமா செய்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருக்கக்கூடாது. சமீபத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை நியமனம் செய்த கபில்தேவ், அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியினர் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து அது குறித்து பதில் அளிக்கும்படி மூன்று பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சாந்தா ரங்கசாமி, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் இயக்குனர் பதவி இரண்டையும் நேற்று ராஜினாமா செய்து அதற்குரிய கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ கூடி ஆலோசிக்கிறது. இதில் என்ன இரட்டை ஆதாய முரண்பாடு இருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. இந்த கமிட்டியில் இருப்பது ஒரு கவுரவம் அவ்வளவு தான். ஆனால் தற்போதைய பிரச்சினை காரணமாக இந்த கமிட்டிக்கு தகுந்த முன்னாள் வீரர்களை அடையாளம் காண்பது கடினம்’ என்றார். இவர்கள் மீதான இரட்டை ஆதாய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டி வரலாம்.


Next Story