தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான தொடக்கம் - ரோகித் சர்மா சதம் அடித்தார்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி சிறப்பான தொடக்கம் - ரோகித் சர்மா சதம் அடித்தார்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:18 PM GMT (Updated: 2 Oct 2019 11:18 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் மழை பாதிப்புக்கு மத்தியில் இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது. டெஸ்டில் முதல்முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோகித் சர்மா சதம் அடித்தார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. தென்ஆப்பிரிக்க அணியில் புதுமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமி இடம் பிடித்தார்.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி மயங்க் அகர்வாலுடன் இணைந்து முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா அடியெடுத்து வைத்தார்.

வெரோன் பிலாண்டரும், ரபடாவும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு தாக்குதலை தொடங்கினர். பிலாண்டர், ஸ்டம்பை குறி வைத்து பவுலிங் செய்தார். முதல் அரைமணி நேரம் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் நமது வீரர்கள் சற்று தடுமாறினர். ரோகித் சர்மாவும், அகர்வாலும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொண்ட பிறகு, மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் எதிரணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்களை திரட்டினர். கேஷவ் மகராஜ், டேன் பீட், செனுரன் முத்துசாமி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இவர்கள் உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்திருந்தனர். தொடர்ந்து ரோகித்-அகர்வால் கூட்டணி முழுமையாக கோலோச்சியது. ரோகித் சர்மா, ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்த தவறவில்லை. குறிப்பாக டேன் பீட்டின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு பிரமாதமான சிக்சர்களை நொறுக்கினார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் தனது 4-வது அரைசதத்தை கடந்த மயங்க் அகர்வால் ‘கன்னி’ சதத்தை நோக்கி முன்னேறினார்.



 


இருவரும் ரன்வேகத்தை அதிகரிக்கச் செய்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து தேனீர் இடைவேளை விடப்பட்டது. ஆனால் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர முடியவில்லை.

இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் (ரன்ரேட் 3.41) சேர்த்து இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரோகித் சர்மா 115 ரன்களுடனும் (174 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்), மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் (183 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளனர். மழையால் முதல் நாளில் 30.5 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இன்றைய 2-வது நாள் ஆட்டம் காலை 9.20 மணிக்கு தொடங்கும். போட்டி நடக்கும் எல்லா நாட்களிலும் இது போன்று மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிராட்மேனின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா

* டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வப்போது மிடில் வரிசையில் விளையாடி வந்த ரோகித் சர்மா இந்த டெஸ்டில் முதல்முறையாக தொடக்க வீரராக இறங்கியதுடன் சதமும் அடித்து அமர்க்களப்படுத்தினார். தொடக்க வீரராக இறங்கிய முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய 4-வது இந்தியர் ரோகித் சர்மா ஆவார். ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஏற்கனவே இச்சாதனையை செய்துள்ளனர்.

* மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) சர்வதேச கிரிக்கெட்டிலும் தொடக்க ஆட்டக்காரராக சதம் அடித்த ஒரே இந்தியர் ரோகித் சர்மா ஆவார். ஒட்டுமொத்தத்தில் 8-வது வீரர் ஆவார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), பிரன்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்தில் (இருவரும் நியூசிலாந்து), தில்ஷன் (இலங்கை), அகமது ஷேசாத் (பாகிஸ்தான்), ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), தமிம் இக்பால் (வங்காளதேசம்) முந்தைய சாதனையாளர்கள் ஆவர்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா 15 இன்னிங்சில் விளையாடி 4 சதம், 5 அரைசதம் உள்பட 884 ரன்கள் (சராசரி 98.22) சேர்த்துள்ளார். இதன் மூலம் குறைந்தது 10 இன்னிங்சிஸ் ஆடிய வீரர்களில் உள்நாட்டில் சிறந்த சராசரியை கொண்டுள்ள பிராட்மேனின் சாதனையை (50 இன்னிங்சில் 4,322 ரன்னுடன் சராசரி 98.22) ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

* ரோகித்தும், அகர்வாலும் முதல் விக்கெட்டுக்கு இதுவரை 202 ரன்கள் எடுத்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடி ஒன்று 200 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது நிகழ்வாகும். 2004-ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் கம்பீர்-ஷேவாக் ஜோடி 218 ரன்களும், 2008-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் ஷேவாக்-வாசிம் ஜாபர் இணை 213 ரன்களும் எடுத்தனர்.

* இந்த போட்டியையும் சேர்த்து ஆசிய கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 8 டெஸ்டுகளில் டாசில் தோற்று இருக்கிறது. முந்தைய 7 டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை.

‘தொடக்க வீரராக இறங்க மனதளவில் தயாராக இருந்தேன்’- ரோகித் சர்மா


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தொடக்க வீரராக களம் கண்டு சதம் அடித்த 32 வயதான இந்திய வீரர் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை தொடக்க ஆட்டக்காரராக ஆட வைப்பது குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்ததை அறிவேன். அதனால் ஏதாவது ஒரு கட்டத்தில் தொடக்க வீரராக இறங்க வேண்டி வரலாம் என்று கடந்த 2 ஆண்டுகளாக மனதளவில் நான் தயாராகவே இருந்தேன். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் (ஆகஸ்டு மாதம்) போது அணி நிர்வாகம் இது பற்றி என்னிடம் தெளிவாக சொல்லி விட்டது.

டெஸ்டில் தொடக்க வீரராக ஆடுவது வித்தியாசமானது. முதலில் நம்மை மனரீதியாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதே போல் பேட்டிங் நுட்பத்திலும் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை தொடக்க வரிசை தான் எனது ஆட்டத்துக்கு பொருத்தமானதாக இருப்பதாக நினைக்கிறேன். அதற்காக 5, 6-வது வரிசையில் விளையாடிய போது அது எனக்கு உகந்த வகையில் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் தொடக்க வீரராக ஆடும் போது புத்துணர்ச்சியுடன் இறங்குவோம். புதிய பந்தை யார் வீசப்போகிறார்கள். பீல்டிங் அமைப்பு எப்படி இருக்கும் என்பதெல்லாம் தெரிந்து விடும். அதனால் திட்டமிடல் எளிதாக இருக்கும். அதே சமயம் 6-வது பேட்டிங் வரிசையில் விளையாடும் போது, பந்து ரிவர்ஸ்ஸ்விங் ஆகும். பீல்டிங் கட்டமைப்பு வேறுவிதமாக இருக்கும். இவற்றை எல்லாம் தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


 


 தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் தமிழருக்கு இடம்

இந்த டெஸ்டின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நுழைந்துள்ள தென்ஆப்பிரிக்க இடக்கை சுழற்பந்து வீச்சாளர் செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது குடும்பம் தமிழகத்தில் இருந்து தென்ஆப்பிரிக்காவுக்கு குடியேறி விட்டது. ஆனால் செனுரன் முத்துசாமி பிறந்து வளர்ந்தது எல்லாமே தென்ஆப்பிரிக்காவில் தான். 25 வயதான செனுரன் முத்துசாமி, சுழற்பந்து வீசுவதுடன், பேட்டிங்கும் செய்யக்கூடியவர். இந்த டெஸ்டில் முதல் நாளில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை.

முன்னதாக முத்துசாமி அளித்த பேட்டியில், ‘என்னுடைய பூர்வீகம் சென்னை. எனது சொந்த பந்தங்கள் நாகப்பட்டினத்தில் உள்ளனர். தலைமுறை கடந்து விட்டாலும் இந்திய கலாசாரம், தமிழக பாரம்பரியம் இன்னும் எங்களை விட்டு அகலவில்லை. தாயகம் திரும்பியதும் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டர்பனில் யோகா செய்வேன். அங்கு தினமும் கோவிலுக்கு செல்வது உண்டு. எனது உறவினர்களில் சிலர் கூட தமிழ் பேசுவார்கள். துரதிர்ஷ்டவசமாக எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ள தொடங்கி இருக்கிறேன்’ என்றார். இலங்கை முன்னாள் வீரர்களான சங்கக்கரா, ஹெராத் ஆகியோர் தனது முன்மாதிரி என்றும் முத்துசாமி குறிப்பிட்டார்.

Next Story