கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி


கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 4 Oct 2019 9:55 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி படுதோல்வி அடைந்தது.

சூரத், 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி படுதோல்வி அடைந்தது.

இந்திய அணி தோல்வி

தென்ஆப்பிரிக்கா - இந்தியா பெண்கள் அணிகள் இடையிலான 6-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சூரத்தில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லிசிலி லீ 84 ரன்களும், கேப்டன் சுன் லூஸ் 62 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் வெறும் 70 ரன்னில் சுருண்டது. 20 ஓவர் போட்டியில் இந்தியாவின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். வேதா கிருஷ்ணமூர்த்தி (26 ரன்), அருந்ததி ரெட்டி (22 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா 105 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது.

ஹர்மன்பிரீத் கவுரின் 100-வது ஆட்டம்

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் போல்டு ஆனார். இது அவருக்கு 100-வது ஆட்டமாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 100 ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஆண்கள் கிரிக்கெட்டில் இந்திய அளவில் டோனி, ரோகித் சர்மா தலா 98 ஆட்டங்களில் பங்கேற்றதே அதிகபட்சமாகும்.

ஹர்மன்பிரீத் கவுரின் ‘செஞ்சுரி ஆட்டம்’ அவருக்கு ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது. ஆனாலும் தென்ஆப்பிரிக்காவுக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இரண்டு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டிருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வதோதராவில் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.

Next Story