2-வது இன்னிங்சின் ஹீரோ முகமது ஷமிக்கு இந்திய கேப்டன் கோலி பாராட்டு


2-வது இன்னிங்சின் ஹீரோ முகமது ஷமிக்கு இந்திய கேப்டன் கோலி பாராட்டு
x
தினத்தந்தி 6 Oct 2019 10:30 PM GMT (Updated: 6 Oct 2019 8:50 PM GMT)

விராட் கோலி (இந்திய கேப்டன்): ஜடேஜா, அஸ்வின் இருவரும் அபாரமாக பந்து வீசினர்.

விசாகப்பட்டினம், 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் கேப்டன்கள் அளித்த பேட்டி வருமாறு:-

விராட் கோலி (இந்திய கேப்டன்): ஜடேஜா, அஸ்வின் இருவரும் அபாரமாக பந்து வீசினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் முதலாவது இன்னிங்சில் கொஞ்சம் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் நாங்களும் 500 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்சில் தான் பவுலர்களின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். முகமது ஷமி 2-வது இன்னிங்சில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். 5 விக்கெட் வீதம் வீழ்த்திய 4 முறை 2-வது இன்னிங்சில் நிகழ்ந்தவை தான். இங்கு பேட்ஸ்மேன்கள் ரன் குவித்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் கடினமான இந்த ஆடுகளத்தில் சாதித்த பந்து வீச்சாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும், மயங்க் அகர்வால் முதலாவது இன்னிங்சிலும் அருமையாக ஆடினர்.

பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்க கேப்டன்): நாங்கள் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் பெருமை அளிக்கிறது. சீனியர் வீரர்களான டி காக்கும், டீன் எல்கரும் அற்புதமாக ஆடி சதம் அடித்தனர். இந்திய துணை கண்டத்தில் 400 ரன்களுக்கு மேல் குவிப்பது எளிதான விஷயம் அல்ல. இதன் மூலம் எங்களது வீரர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. 2-வது இன்னிங்சில் வியப்புக்குரிய வகையில் விளையாட வேண்டி இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அது மாதிரி நடக்கவில்லை. 2-வது இன்னிங்சிஸ் ரோகித் சர்மாவின் அதிரடியான சதம் தான் ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு கடினமாக மாற்றி விட்டது. இந்த ஆடுகளம் முதல் இரு நாட்களில் பேட்டிங்குக்கும், அடுத்த இரு நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருந்தது. கடைசி நாளில் இருவித தன்மையுடன் காணப்பட்டது. என்னை பொறுத்தவரை இது டெஸ்ட் போட்டிக்கு நல்ல ஆடுகளம் ஆகும். அடுத்த இரு போட்டிக்கான ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு இன்னும் அதிகமாக ஒத்துழைக்கும் வகையில் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ரோகித் சர்மா (ஆட்டநாயகன்): தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஏதாவது ஒரு கட்டத்தில் நான் தொடக்க வீரராக இறங்க வேண்டி வரலாம் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக டெஸ்ட் போட்டியில் ஆடாத காலங்களிலும் கூட வலை பயிற்சியில் நான் புதிய பந்தில் தான் பயிற்சி மேற்கொண்டேன். வெள்ளை பந்து என்றாலும் சரி, சிவப்பு பந்து என்றாலும் சரி தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். எனது அணுகுமுறை எச்சரிக்கை, ஆக்ரோஷம் கலந்து இருக்கும். இது முடிவல்ல, தொடக்கம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story