கிரிக்கெட்

‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி + "||" + Doesn't ask for favorable pitch Indian bowling coach Bharath Arun Interview

‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி

‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி
சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்டு பெறுவதில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார்.
புனே,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த டெஸ்டின் போது மழை குறுக்கிட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குறிப்பிட்ட தன்மையுடைய (சாதகமான) ஆடுகளங்கள் தான் வேண்டும் என்று நாங்கள் (அணி நிர்வாகம்) ஒரு போதும் கேட்டு பெறுவதில்லை. உலகின் ‘நம்பர் ஒன்’ டெஸ்ட் அணியாக இருக்கும் நாங்கள், எந்த மாதிரியான சீதோஷ்ண நிலையில் ஆடுகளங்கள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். வெளிநாட்டில் விளையாடும் போது, ஆடுகளத்தை அதிகமாக கவனத்தில் கொள்வது கிடையாது. அப்போது நாங்கள், ‘இதுவும் நம்ம ஊர் பிட்ச் போன்றது தான், இரண்டு அணிக்கும் அதே பிட்ச் தானே’ என்று சொல்லிக்கொள்வோம். ஆடுகளம் மீது கவனம் செலுத்துவதை விட, எங்களது பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் நோக்குடன் உழைக்கிறோம்.

அன்னிய மண்ணில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அமையும் போது, இந்திய வீரர்கள் இத்தகைய ஆடுகளங்களில் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அவர்களது கோணத்தில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதே சிறந்த ஆடுகளம். அதே நேரத்தில் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் என்றால், முதல் நாளில் இருந்தே பந்தை எப்படி சுழன்று திரும்பும் வகையில் வீச முடியும் என்கிறார்கள். ஸ்விங் வேகத்துக்கு உகந்த ஆடுகளம் என்றால் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் சுழன்று திரும்பும் ஆடுகளம் என்றால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுகளத்தன்மை போக போக மாறும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அது தான் நல்லது.

ஆனால் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ வேண்டும் என்று விரும்பினால், ஆடுகளத்தை பார்க்கக்கூடாது. உங்களது பந்து வீச்சை வலுப்படுத்துவதிலும், சூழ்நிலைக்கு ஏற்ப உடனடியாக பந்து வீச்சில் மாற்றம் செய்வதிலும் கவனம் செலுத்தினால் சாதிக்க முடியும்.

பேட்டிங்குக்கு அனுகூலமான ஆடுகளங்களிலும் இந்திய பவுலர்கள் அசத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இல்லை. பந்து பெரிய அளவில் ரிவர்ஸ்ஸ்விங்கும் ஆகவில்லை. வழக்கமான இந்திய ஆடுகளமாக இருந்தது. பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகாத போது, களத்தில் பந்தை பிட்ச் செய்யும் விதத்திலும், சரியான அளவில் வீசுவதிலும் (லைன் அன்ட் லென்த்) மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதைத் தான் கடந்த டெஸ்டின் 2-வது இன்னிங்சில் முகமது ஷமி செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது.

கேப்டன் விராட் கோலி பந்து வீச்சாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறார். அதாவது நீங்கள் தொடர்ச்சியாக அதிக ஓவர்கள் வீச விரும்புகிறீர்களா அல்லது குறைந்த ஓவர்கள் வீசப்போகிறீர்களா என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறார்.

பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் நமது வீரர்கள் திறமையானவர்கள். அதனால் தான் அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறது. பேட்டிங்குக்கு சாதகமான உள்ளூர் ஆடுகளங்களில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் நமது பவுலர்கள் ரிவர்ஸ் ஸ்விங் திறமையை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்க வேண்டும் என்றால் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் கில்லாடியாக இருக்க வேண்டும். இதில் உள்ளூர் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்வாறு பரத் அருண் கூறினார்.