கிரிக்கெட்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம் + "||" + Rohit Sharma, Ashwin achieves career best Test ranking

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
துபாய்,

விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய கேப்டன் விராட் கோலி (20 மற்றும் 31 ரன்) தரவரிசையில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். 4 புள்ளிகளை இழந்துள்ள அவர் 899 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். 2018-ம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு முதல்முறையாக 900 புள்ளிகளுக்கு கீழ் அவர் இறங்கியுள்ளார். துணை கேப்டன் ரஹானே 3 இடங்களை பறிகொடுத்து 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

இந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் (176 ரன், 127 ரன்) விளாசியதோடு 13 சிக்சர்கள் நொறுக்கி உலக சாதனை படைத்த இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா தரவரிசையில் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். 36 இடங்கள் எகிறியுள்ள அவர் 17-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இரட்டை செஞ்சுரி அடித்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 63-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கு வந்திருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 111 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 4 இடங்கள் அதிகரித்து டாப்-10 இடத்துக்குள் நுழைந்து அதாவது 7-வது இடத்தை பெற்றுள்ளார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சதத்தை கடந்த இன்னொரு தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் 5 இடங்கள் உயர்ந்து 14-வது இடம் வகிக்கிறார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ வீரராக வலம் வருகிறார். விசாகப்பட்டினம் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சுழலில் வித்தை காட்டிய இந்திய வீரர்அஸ்வின் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். டெஸ்டில் அதிவேகமாக 350 விக்கெட் வீழ்த்தி முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் தற்போது 10-வது இடம் வகிக்கிறார்.

2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் உயர்ந்து 16-வது இடத்தை (710 புள்ளி) பிடித்துள்ளார். தரவரிசையில் இது அவரது அதிகபட்ச புள்ளி எண்ணிக்கையாகும்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்தை எட்டியுள்ளார்.