தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’
x
தினத்தந்தி 11 Oct 2019 10:34 AM GMT (Updated: 11 Oct 2019 10:37 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் விளாசி அசத்தினார்.

புனே,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்), துணை கேப்டன் அஜிங்யா ரஹானே (18 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிரணி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தனர். தொடக்கத்தில் கோலியும், ரஹானேவும் நிதானம் காட்டினர். பேட்டின் விளிம்பில் பட்டு ஒரு சில நேரம் பந்து பின்பகுதிக்கு எகிறிய போதிலும் அதை தென்ஆப்பிரிக்க பீல்டர்களால் கேட்ச்சாக்க முடியவில்லை. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக விராட் கோலி பந்தை பவுண்டரிக்கு ஓடவிட்டு தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஆண்டில் டெஸ்டில் கோலி அடித்த முதல் சதம் இது தான். உணவு இடைவேளை முடிந்ததும் ரஹானே (59 ரன், 168 பந்து, 8 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் கேட்ச் ஆனார். இது கேஷவ் மகராஜின் 100-வது விக்கெட்டாகும்.

இதன் பின்னர் விராட் கோலியுடன், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கைகோர்த்தார். ரன்வேகத்தை அதிகரிக்கும் முனைப்புடன் செயல்பட்ட கோலி, ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டிய வண்ணம் இருந்தார். ஜடேஜாவை பொறுத்தவரை முதல் 44 பந்துகளில் வெறும் 9 ரன் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு கேஷவ் மகராஜின் பந்து வீச்சில் 2 பவுண்டரியை விரட்டியதோடு அதிரடி வேட்டையில் குதித்தார். இருவரும் தென்ஆப்பிரிக்க பவுலர்களை நையபுடைத்து எடுத்தனர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் கோலியின் ரன் ஜாலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்திய விராட் கோலி 295 பந்துகளில் தனது 7-வது இரட்டை சதத்தை எட்டினார். அனைத்து இரட்டை சதங்களும் அவர் கேப்டனாக இருந்து அடித்தவை என்பது கவனிக்கத்தக்கது.

கோலி 208 ரன்னில், சுழற்பந்து வீச்சாளர் முத்துசாமியின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பிளிஸ்சிஸ்சிடம் கேட்ச் ஆனார். ஆனால் அது நோ-பாலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடுவர், கோலியை பெவிலியன் திரும்ப வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து டி.வி. ரீப்ளேயை சோதித்த போது, முத்துசாமி கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது தெரியவந்தது. இந்த அதிர்ஷ்டத்தால் கோலி தொடர்ந்து மட்டையை சுழற்றும் வாய்ப்பை பெற்றார். கேஷவ் மகராஜின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினர். விராட் கோலி 250 ரன்களை கடந்த நிலையில், ஜடேஜாவின் சதத்துக்காக காத்திருந்தார். அந்த சமயம் முத்துசாமியின் பந்து வீச்சில் சில அடி இறங்கி வந்து ஜடேஜா பந்தை தூக்கியடித்தார். அது கேட்ச் ஆக ஜடேஜா 91 ரன்களில் (104 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். கோலி இருந்த உத்வேகத்துக்கு தொடர்ந்து ஆடியிருந்தால் முச்சதத்தை எட்டியிருப்பார். ஆனால் அணியின் நலன் கருதி அத்துடன் இன்னிங்சை முடித்துக் கொண்டார்.

இதன்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 600 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது நிகழ்வாகும்.

விராட் கோலி 254 ரன்களுடன் (336 பந்து, 33 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்டில் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஜடேஜா-கோலி கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 225 ரன்கள் திரட்டியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5-வது விக்கெட்டுக்கு இந்திய ஜோடியின் அதிகபட்சம் இதுவாகும். இதற்கு முன்பு தெண்டுல்கர்-ஷேவாக் இணை 2001-ம் ஆண்டு புளோம்பாண்டீனில் நடந்த டெஸ்டில் 220 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் எய்டன் மார்க்ராம் (0), டீன் எல்கர் (6 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலி செய்தார். டெம்பா பவுமா (8 ரன்), முகமது ஷமியின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சஹாவிடம் பிடிபட்டார். ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story