புனே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்


புனே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
x
தினத்தந்தி 12 Oct 2019 8:07 AM GMT (Updated: 12 Oct 2019 8:07 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தடுமாறி வருகிறது.

புனே , 

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்தியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (63 ரன்), துணை கேப்டன் அஜிங்யா ரஹானே (18 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, எதிரணி பந்து வீச்சாளர்களை மிரள வைத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் விளாசினார். கோலி 254 ரன்கள் எடுத்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில்   5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 

அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா, இந்திய பந்து வீச்சில் திணறியது. ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்களுடன் தள்ளாடிக்கொண்டிருந்தது. 3 ஆம் நாள் ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா  தடுமாற்றம் கண்டது. சீரான இடைவெளியின் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். கேப்டன் டுபிளஸிஸ் (64 ரன்கள்) தவிர வேறு யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை.   63 ஓவர்கள் நிறைவின் போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்க அணி இன்னும் 431 ரன்கள் பின் தங்கியுள்ளது. 

Next Story