கிரிக்கெட்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார் + "||" + ICC Rahane, Ashwin progress in Test cricket rankings - Viratkohli came close to number one

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்
ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் கண்டுள்ளனர். கேப்டன் விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்.
துபாய்,

புனேயில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் செயல்பாட்டின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


இதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காததால் சறுக்கலை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 254 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் விராட்கோலி 37 புள்ளிகள் சேர்த்துள்ளார். விராட்கோலி 936 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் தொடருகிறார். ஸ்டீவன் சுமித்தை விட விராட்கோலி ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கி இருக்கிறார். இன்னும் 2 புள்ளிகள் சேர்த்தால் விராட்கோலி மீண்டும் நம்பர் ஒன் மகுடத்தை அலங்கரிக்க முடியும்.

நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் (878 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இந்திய வீரர் புஜாரா (817 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (749 புள்ளிகள்) 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். இந்திய வீரர் ரஹானே (721 புள்ளிகள்) 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் (108 ரன்) 8 இடங்கள் ஏற்றம் கண்டு 17-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 இடம் சரிந்து 22-வது இடத்தை பெற்றுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் ரபடா (835 புள்ளிகள்), இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா (818 புள்ளிகள்) முறையே 2-வது, 3-வது இடத்தில் தொடருகின்றனர். 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.