‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், மந்தனா - துளிகள்


‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், மந்தனா - துளிகள்
x
தினத்தந்தி 15 Oct 2019 11:36 PM GMT (Updated: 15 Oct 2019 11:36 PM GMT)

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

துபாய்,

பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா (755 புள்ளி) 2-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மந்தனா ஆடவில்லை. இதனால் இந்த சறுக்கல் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து வீராங்கனை அமெ சட்டர்த்வெயிட் (759 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய கேப்டன் மிதாலிராஜ் 7-வது இடத்தில் உள்ளார்.

துளிகள்

* இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தென்ஆப்பிரிக்க அணியினர் நேற்று ராஞ்சிக்கு போய் சேர்ந்தனர். இந்திய அணியில் கேப்டன் கோலி, ரஹானே உள்ளிட்ட சில வீரர்களை தவிர்த்து மற்றவர்கள் ராஞ்சி சென்றடைந்தனர்.

* இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்தியா சிறந்த அணியாக திகழ்கிறது. ஆனால் ஐ.சி.சி. போன்ற பெரிய தொடர்களில் பட்டம் வெல்ல முடியவில்லை. பெரிய தொடர்களில் அரைஇறுதி, இறுதிப்போட்டி தவிர லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடுகிறார்கள். இந்த நிலைமையை கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றிக்காட்டும் என்று நம்புகிறேன். கோலி, ஒரு சாம்பியன் வீரர்.’ என்றார்.

* இந்திய மற்றும் மாநில கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளில் இருந்தால் இரட்டை ஆதாய சர்ச்சை கிளம்பி விடுகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறை பிரிவு 38-ல் திருத்தம் செய்ய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால், முன்னாள் வீரர்கள் இரண்டு ஆண்டுக்கு குறைவான ஒப்பந்தம் அடிப்படையில் பல்வேறு பொறுப்புகளை வகிக்க முடியும்.

Next Story