கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை + "||" + Vijay Hazare Cup In cricket Mumbai youngster Jaiswal Double hundred Beat World record

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில்மும்பை இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து உலக சாதனை
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ஜார்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் 17 வயதான ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜெய்ப்பூர், 

18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட இந்த தொடரில் நேற்று ஜெய்ப்பூரில் தனது ஒரு ஆட்டத்தில் தமிழக அணி, பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத்தை (சி பிரிவு) எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 9 விக்கெட்டுக்கு 274 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் முரளிவிஜய் 94 ரன்களும் (106 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), அபினவ் முகுந்த் 79 ரன்களும் (68 பந்து, 13 பவுண்டரி), வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களும் எடுத்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் ரன்-அவுட் (0) ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 42.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் தமிழக அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 55 ரன்கள் எடுத்தார். கேப்டன் பார்த்தீப் பட்டேல் 6 ரன்னில் கேட்ச் ஆனார். தமிழகம் தரப்பில் முகமது 3 விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தோல்வியே சந்திக்காத தமிழக அணி தொடர்ச்சியாக ருசித்த 9-வது வெற்றி இதுவாகும். இத்துடன் ‘சி’ பிரிவின் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்த பிரிவில் இடம் பெற்ற 10 அணிகளில் முதல் 2 இடங்களை பிடித்த தமிழகமும் (9 வெற்றியுடன் 36 புள்ளி), குஜராத்தும் (8 வெற்றி, ஒரு தோல்வியுடன் 32 புள்ளி) கால்இறுதிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் ஆலூரில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான மும்பை அணி, இஷன் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணியுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரரான ‘இளம் புயல்’ யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 203 ரன்கள் (154 பந்து, 17 பவுண்டரி, 12 சிக்சர்) விளாசி பிரமிக்க வைத்தார். தொடர்ந்து ஆடிய ஜார்கண்ட் அணியில் விராட் சிங்கும் (100 ரன்) சதம் அடித்தும் பலன் இல்லை. அந்த அணி 46.4 ஓவர்களில் 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை பெற்றது.

இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் நொறுக்கிய இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட் (சர்வதேச ஒரு நாள் மற்றும் முதல்தர ஒரு நாள் போட்டி இரண்டையும் சேர்த்து) வரலாற்றில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவரது தற்போதைய வயது 17 ஆண்டு 292 நாட்கள். இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆலன் பாரோ உள்ளூர் கிரிக்கெட்டில் தனது 20 வயதில் இரட்டை சதம் எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அவர் 1975-ம் ஆண்டு டர்பனில் நடந்த தென்ஆப்பிரிக்கா லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் நடல் மாகாணம் அணிக்காக களம் இறங்கி 202 ரன்கள் எடுத்திருந்தார்.

லிஸ்ட் ‘ஏ’ கிரிக்கெட்டில் இந்திய தரப்பில் மொத்தம் 9 இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் தெண்டுல்கர், ஷேவாக், ரோகித் சர்மா (3 முறை) ஆகியோர் சர்வதேச ஒரு நாள் போட்டியில் எடுத்த இரட்டை செஞ்சுரிகளும் அடங்கும்.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் பதிவான 3-வது இரட்டை சதமாக அமைந்தது. கடந்த வாரம் தான் கேரளாவின் சஞ்சு சாம்சன் இதே மைதானத்தில் நடந்த கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 212 ரன்கள் குவித்து இருந்தார்.

ஜெய்ஸ்வால், உத்தரபிரதேச மாநிலம் பதோஹியை சேர்ந்தவர். இவரது தந்தை பூபேந்திரா சிறிய கடை நடத்தி வருகிறார். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு ஜெய்ஸ்வால் தனது 10-வது வயதில் மும்பைக்கு வந்தார். இங்கு தனது மாமா வீட்டில் தங்கியிருந்து கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். தினமும் ஆசாத் மைதானத்திற்கு சென்று வருவதற்கு போக்குவரத்தில் சிரமம் இருந்ததால், சிலரது உதவியோடு அங்கேயே கூடாரத்தில் தங்கினார். அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்ட அவர் தனது வாழ்வாதாரத்துக்காக சாலையோர சிற்றுண்டி கடைகளில் வேலை பார்த்தார். பானிப்பூரி விற்றார்.

பிறகு அவரது பேட்டிங் நுணுக்கங்களை கண்ட உள்ளூர் பயிற்சியாளர் ஜூவாலா சிங் உதவிகரம் நீட்டினார். அதன் பிறகு படிப்படியாக வளர்ச்சி கண்டு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார். ஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய ஜெய்ஸ்வால் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

நடப்பு விஜய் ஹசாரே தொடரில், ஏற்கனவே இரண்டு சதங்கள் (கேரளாவுக்கு எதிராக 113 ரன், கோவாவுக்கு எதிராக 122 ரன்) அடித்துள்ளார். ஏழ்மை ஒரு தடை அல்ல; அர்ப்பணிப்பு, விடா முயற்சி இருந்தால் எதிலும் முத்திரை பதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழும் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

அதிரடி பேட்டிங் தொடரும்

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் போஸ் கொடுக் கிறார் ஜெய்ஸ்வால் (இடது).
“இரட்டை சதம் அடித்தது உற்சாகம் அளிக்கிறது. இந்த தருணத்தை அனுபவித்து மகிழ்கிறேன். இது தொடக்கம் தான். அடுத்து வரும் தொடர்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இது போன்ற அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்துவதில் தொடர்ந்து முயற்சிப்பேன்”

---ஜெய்ஸ்வால்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் திருட்டு
பா.ஜனதா எம்.பி. கவுதம் கம்பீர் தந்தையின் கார் மாயமானது இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட்: 4 நாள் நடக்கிறது
கல்லூரி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டி 4 நாள்கள் நடக்க உள்ளது.
3. இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி: மழையால் ஆட்டம் துவங்குவதில் தாமதம்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
4. மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
மகளிர் உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
5. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : நியூசிலாந்து அணி வெற்றி, தொடரையும் வென்றது
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை முழுமையாக இழந்தது.