இந்திய வேகப்பந்து வீச்சு, கடந்தகால வெஸ்ட் இண்டீஸ் அணியை நினைவூட்டுகிறது லாரா பேட்டி


இந்திய வேகப்பந்து வீச்சு, கடந்தகால வெஸ்ட் இண்டீஸ் அணியை நினைவூட்டுகிறது லாரா பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2019 11:01 PM GMT (Updated: 17 Oct 2019 11:01 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது.

மும்பை,

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது இதை பார்த்தேன். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் தற்போது ஓய்வில் இருக்கும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் தரம் வாய்ந்த பவுலர்களாக திகழ்கிறார்கள். 1980, 90-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பலம் வேகப்பந்து வீச்சு தான். அதை இந்திய பந்து வீச்சு எனக்கு கொஞ்சம் நினைவூட்டுகிறது.

இவர் போல் ஒரு கேப்டன் இல்லை என்று சொல்லும் அளவுக்கு விராட் கோலி அருமையாக செயல்படுகிறார். களத்திலும் சரி, வெளியிலும் சரி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார். டோனி அமைத்து தந்த அடித்தளம், அவருக்கு பின்புலமாக இருந்தது. அதில் இருந்து அவர் எழுச்சி பெற்று, தனது கேப்டன்ஷிப்பை வித்தியாசமான முறைகளில் செயல்படுத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் சரியான பாதையில் பயணிப்பதாக நினைக்கிறேன்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் பொல்லார்ட் அனுபவம் வாய்ந்தவர். அவருக்கு சக வீரர்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். அவர் உலகம் முழுவதும் நிறைய கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். அதனால் வெற்றிகரமாக செயல்பட என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பார். எனவே அவரது நியமனம் நல்ல முடிவு தான். அவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நீண்ட காலம் விளையாடினால், அணி சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும். இவ்வாறு லாரா கூறினார்.

Next Story