கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி + "||" + Vijay Hazare Cup Cricket: Tamil Nadu, Chhattisgarh Teams qualify for the semi-finals

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெற்றன.
ஆலூர்,

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால்இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் லீக் போட்டியில் அதிக வெற்றிகள் பெற்றதன் அடிப்படையில் தமிழ்நாடு, சத்தீஷ்கார் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.


விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கர்நாடக மாநிலம் ஆலூரில் நேற்று காலை நடந்த 3-வது கால் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு- பஞ்சாப் அணிகள் மோதின.

மழை காரணமாக இந்த போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வாஷிங்டன் சுந்தர் 35 ரன்னுடனும், எம்.அஸ்வின் 5 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் ஆடிய பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி போட்டியில் குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் ஆடினால் தான் போட்டியின் முடிவை தீர்மானிக்க முடியும். இதனால் முந்தைய லீக் ஆட்டத்தின் முடிவின் அடிப்படையில் அரைஇறுதிக்கு முன்னேறும் அணி முடிவு செய்யப்பட்டது.

லீக் சுற்றில் தனது 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்த தமிழக அணி அரை இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி லீக் சுற்றில் 8 ஆட்டத்தில் விளையாடி 5 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருந்ததால் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

ஆலூரில் நடந்த 4-வது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, சத்தீஷ்காரை சந்தித்தது. முதலில் ஆடிய சத்தீஷ்கார் அணி 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

பின்னர் 40 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மாற்றியமைக்கப்பட்ட இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 11.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது. லீக் சுற்றில் அதிக வெற்றி பெற்ற (5 வெற்றி) சத்தீஷ்கார் அணி அரைஇறுதிக்குள் நுழைந்தது. லீக் சுற்றில் 4 வெற்றிகள் மட்டுமே ருசித்த மும்பை அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

பெங்களூருவில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் அரைஇறுதிப்போட்டிகளில் கர்நாடகம்-சத்தீஷ்கார், தமிழ்நாடு-குஜராத் அணிகள் மோதுகின்றன.