கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா + "||" + South Africa lose 16 wickets in one day - India on the brink of victory

தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா

தென்ஆப்பிரிக்க அணி ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவிப்பு - வெற்றியின் விளிம்பில் இந்தியா
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நேற்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
ராஞ்சி,

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 212 ரன்னும், ரஹானே 115 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜார்ஜ் லின்டே 4 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் ரன் எதுவும் எடுக்காமலும், குயின்டான் டி காக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜூபைர் ஹம்சா ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. 298 ரன்கள் எடுத்தால் தான் ‘பாலோ-ஆனை’ தவிர்க்க முடியும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் தென்ஆப்பிரிக்க அணியின் ஜூபைர் ஹம்சா, கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். முதல் ஓவரிலேயே பாப் டுபிளிஸ்சிஸ்சை(1 ரன்), உமேஷ்யாதவ் தனது ‘அவுட் ஸ்விங்’ பந்து வீச்சு மூலம் போல்டு ஆக்கினார். அடுத்து பவுமா, ஜூபைர் ஹம்சாவுடன் இணைந்தார்.

ஜூபைர் ஹம்சா நிலைத்து நின்று ஆடியதுடன் அவ்வப்போது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அவர் 56 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை எட்டினார். அவர் ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் ஒரு சிக்சர் தூக்கி கலக்கினார். அணியின் ஸ்கோர் 107 ரன்னாக உயர்ந்த போது ஜூபைர் ஹம்சா (62 ரன்கள், 79 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ஜூபைர் ஹம்சா-பவுமா ஜோடி 91 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரிலேயே பவுமா (32 ரன்கள்) ஷபாஸ் நதீம் பந்து வீச்சை முன்னால் இறங்கி தடுத்து ஆட முயன்ற போது விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய ஹென்ரிச் கிளாசென் (6 ரன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆகி நடையை கட்டினார். மதிய உணவு இடைவேளையின் போது தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது.

பின்னர் வந்த வீரர்கள் இந்திய அணியினரின் துல்லியமான தாக்குதல் பந்து வீச்சையும், பவுன்சர் ஆயுதத்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்தனர். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய ஜார்ஜ் லின்டே (37 ரன்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 56.2 ஓவர்களில் 162 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. நிகிடி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் நதீம், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தென்ஆப்பிரிக்க அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டியில் ‘பாலோ-ஆன்’ ஆவது இதுவே முதல்முறையாகும். ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி ‘பாலோ-ஆன் ’ ஆகி இருந்தது.

‘பாலோ-ஆன்’ ஆகி தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் அதிர்ச்சி காத்து இருந்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரில் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கிய குயின்டான் டி காக் (5 ரன்) உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே போல்டு ஆனார். அந்த பந்து வேகமாக தாக்கியதில் ஸ்டம்பு பலமுறை பல்டி அடித்தது. அடுத்து களம் இறங்கிய ஜூபைர் ஹம்சா (0), பாப் டுபிளிஸ்சிஸ் (4 ரன்), பவுமா (0) ஆகியோர் விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபார பந்து வீச்சு மூலம் கைப்பற்றி அசத்தினார்.

9.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 26 ரன்னாக இருந்த போது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய பவுன்சர் பந்து தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் ஹெல்மெட்டை பலமாக பதம் பார்த்தது. இதனால் நிலைகுலைந்த அவர் மைதானத்தில் அமர்ந்து விட்டார். அணியின் பிசியோதெரபிஸ்ட் உடனடியாக வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தலைசுற்றல் இருப்பதை உணர்ந்த டீன் எல்கர் (16 ரன்) அத்துடன் வெளியேறினார். அதோடு தேனீர் இடைவேளை விடப்பட்டது.

தேனீர் இடைவேளைக்கு பிறகு, பந்து தாக்கியதில் காது பகுதியில் காயம் அடைந்த டீன் எல்கர் தொடர்ந்து பேட்டிங் செய்ய களம் இறங்கவில்லை. பின்னர் புதிய விதிமுறையின் படி அவருக்கு பதிலாக மாற்று வீரராக டி புருன் களம் இறங்கினார். தொடர்ந்து ஆடிய ஹென்ரிச் கிளாசென் (5 ரன்) உமேஷ் யாதவ் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதைத்தொடர்ந்து டேன் பீட், ஜார்ஜ் லின்டேவுடன் ஜோடி சேர்ந்தார். தென்ஆப்பிரிக்க அணியினர் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும், இந்திய பவுலர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் தொடர்ச்சியாக நெருக்கடி அளித்து சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஜார்ஜ் லின்டே 27 ரன் எடுத்த நிலையில் ஷபாஸ் நதீமால் ‘ரன் அவுட்’ செய்யப்பட்டார். டேன் பீட் (23 ரன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சிலும், ரபடா (12 ரன்) அஸ்வின் பந்து வீச்சிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 46 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிம்பில் தடுமாறி வருகிறது. டி புருன் 42 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்னும், நார்ஜே 12 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். நேற்று ஒரே நாளில் தென்ஆப்பிரிக்கா 16 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி மேலும் 203 ரன்கள் எடுத்தால் தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும். அந்த அணியின் கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றுவது உறுதியாகி விட்டது எனலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி
இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில்,கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம் என்று கோலி நம்புகிறேன் என்றார்.