இந்தியாவின் கருணையற்ற பேட்டிங் எங்களை பலவீனமாக்கி விட்டது - தென்ஆப்பிரிக்க கேப்டன் புலம்பல்


இந்தியாவின் கருணையற்ற பேட்டிங் எங்களை பலவீனமாக்கி விட்டது - தென்ஆப்பிரிக்க கேப்டன் புலம்பல்
x
தினத்தந்தி 22 Oct 2019 11:29 PM GMT (Updated: 22 Oct 2019 11:29 PM GMT)

இந்தியாவின் கருணையற்ற பேட்டிங் எங்களை பலவீனமாக்கி விட்டது என தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறினார்.

ராஞ்சி,

தோல்விக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துவது மிகவும் கடினம். பேட்டிங், பந்து வீச்சு ஏன் பீல்டிங்கில் கூட முழுமையாக ஆதிக்கம் செலுத்தி விட்டனர். 2015-ம் ஆண்டு தொடரை மனதில் கொண்டு சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் மற்றும் இந்திய சுழற்பந்து வீச்சு தாக்குதலை சமாளிப்பது பற்றி தான் அதிகமாக பேசினோம். ஆனால் இந்த முறை அதற்கு நேர்மாறாக ஆடுகளங்கள் இருந்தன. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒத்துழைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர் முழுவதும் அபாரமாக பந்து வீசினர்.

இந்திய அணியின் கருணையற்ற பேட்டிங் தன்மை எங்களை மனரீதியாக மிகவும் பலவீனப்படுத்தி விட்டது. ஒவ்வொரு முறையும் முதலில் பேட் செய்தது அவர்களுக்கு சுலபமானது. மேலும் 500, 600 ரன்கள் குவித்ததால் எங்களது பேட்டிங் வரிசை மீது மிகப்பெரிய அழுத்தம் ஏற்பட்டது. அதில் இருந்து மீள இயலவில்லை. அது மட்டுமின்றி முன்பு அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர். தற்போதைய அணி, இளம் வீரர்களை கொண்ட அணி. பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார்கள். இன்னும் 3-4 ஆண்டுகள் ஆகும் போது அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக மாறி விடுவார்கள். அணியை மறுசீரமைப்பு செய்து வலுப்படுத்துவதற்கான நிறைய பொறுப்பு என்னிடம் இருப்பதாக நினைக்கிறேன். இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.


Next Story