கிரிக்கெட்

‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல் + "||" + Kohli Wants Test Cricket to be Played at Just 5 Venues in India

‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல்

‘இந்தியாவில் 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்த வேண்டும்’ - விராட் கோலி வலியுறுத்தல்
வெளிநாடுகளில் உள்ளது போன்று இந்தியாவிலும் குறிப்பிட்ட 5 மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

ராஞ்சி,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 டெஸ்ட் போட்டிகள் முறையே விசாகப்பட்டினம், புனே, ராஞ்சியில் நடைபெற்றது. இந்த தொடரில் ரசிகர்கள் வருகை மிக மிக குறைவாகவே இருந்தது. சில நாட்கள் மைதானம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது. இந்தியாவில் மொத்தம் 27 மைதானங்களில் டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. 2000-ம் ஆண்டுக்கு பிறகு மட்டும் 18 ஸ்டேடியங்களில் டெஸ்ட் போட்டி அரங்கேறி இருக்கிறது.


வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் வரும் போது மெல்போர்ன், அடிலெய்டு, பிரிஸ்பேன், சிட்னி, பெர்த் ஆகிய மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டி நடத்தப்படுகிறது. இங்கிலாந்தில் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் லண்டன் லார்ட்ஸ், ஓவல், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், நாட்டிங்காம் ஆகிய இடங்களில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்தும் இத்தகைய பாணியையே பின்பற்றுகின்றன.

இதே போல் இந்தியாவிலும் பாரம்பரியமிக்க, பிரபலமான இடங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். கொல்கத்தா, மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, மொஹாலி, நாக்பூர் போன்ற இடங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது எப்போதும் அமோக வரவேற்பு கிடைப்பது உண்டு. அதை மனதில் வைத்து கோலி இவ்வாறு கூறியிருக்கிறார்.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து விராட் கோலி கூறியதாவது:-

இந்தியாவில் குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே டெஸ்ட் போட்டியை நடத்த வேண்டும் என்பது தொடர்பாக நாங்கள் நீண்ட காலமாகவே விவாதித்து வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால், நிரந்தரமான டெஸ்ட் மைதானங்கள் தேவை. எல்லா மைதானங்களிலும் டெஸ்ட் போட்டியை நடத்தக்கூடாது. சில இடங்களில் ரசிகர்கள் கூட்டம் வருவதில்லை.

எனவே இந்தியாவில் வலுவான 5 டெஸ்ட் மைதானங்கள் இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இங்கு வரும் வெளிநாட்டு அணிகள் தாங்கள் இந்த 5 மைதானங்களில் தான் டெஸ்ட் போட்டியில் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப தயார்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

இந்தியாவில் மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்ளன. அவர்களுக்கு சுழற்சி அடிப்படையில் போட்டிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் உடன்படுகிறேன். இது 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு சரியாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியாவில் கால்பதிக்கும் வெளிநாட்டு அணிகளுக்கு தாங்கள் இந்த 5 மைதானங்களில், இத்தகைய ஆடுகளங்களில் தான் ஆடப்போகிறோம், ரசிகர்கள் வருகை இப்படி தான் இருக்கும் என்பவை எல்லாம் தெரிய வேண்டும். அதுவே சவாலான விஷயமாக இருக்கும்.

நமது அணி வெளிநாடு சென்று 4 டெஸ்டுகளில் பங்கேற்க போகிறோம் என்றால், இந்த மைதானத்தில் தான் விளையாடப்போகிறோம், அங்குள்ள ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும், ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியப்போகிறது என்பதை எல்லாம் முன்கூட்டியே அறிந்து கொள்கிறோம். இவ்வாறு கோலி கூறினார்.

தென்ஆப்பிரிக்காவை ‘ஒயிட்வாஷ்’ செய்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலி மேலும் கூறியதாவது:-

ஒட்டுமொத்த இந்திய அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். உண்மையான நோக்கத்துடன் தொடர்ந்து உழைக்கும் போது சாதகமான முடிவுகள் தானாகவே வந்து சேரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டும், ஒவ்வொரு அணிக்கும் கடும் போட்டி அளிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. அந்த மனநிலை தான் கைகொடுக்கிறது. எத்தகைய சூழலிலும் நம்மால் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணமே, எங்களது வெற்றியின் ரகசியம் ஆகும்.

இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் வியப்பூட்டும் வகையில் இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பதற்றத்தையும், தயக்கத்தையும் தாண்டி களத்தில் ஜொலித்த விதம், தொடக்க வீரராக களம் கண்ட முதல் தொடரிலேயே தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்ட அவருக்கே ஒட்டுமொத்த பெருமையும் சேரும். இவ்வாறு கோலி கூறினார்.

டோனி குறித்து கங்குலி என்னிடம் இதுவரை பேசவில்லை - கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம், டோனி தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது ‘டோனி இங்கு தான் இருக்கிறார். வீரர்கள் அறைக்கு சென்றால் நீங்கள் அவரிடம் ஹலோ சொல்லலாம்’ என்று சிரித்தபடி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘கங்குலிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அவர் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக வந்து இருப்பது சிறப்புக்குரியது. ஆனால் டோனியின் எதிர்காலம் குறித்து அவர் என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. இது தொடர்பாக அவருக்கு தேவை ஏற்படும் போது என்னிடம் பேசுவார். இது குறித்து பேச அழைக்கும் போது கங்குலியை சந்திப்பேன்’ என்றார்.
தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி
இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
3. இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியுடன் சுவீடன் அரச தம்பதி சந்திப்பு
இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுவீடன் அரச தம்பதி பிரதமர் மோடியை சந்தித்தனர்.
4. இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட்இண்டீஸ் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டனாக பொல்லார்ட் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை
3 நாள்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று இந்தியா வருகை தருகிறார்.