விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: குஜராத்தை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: குஜராத்தை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 23 Oct 2019 11:08 PM GMT (Updated: 23 Oct 2019 11:08 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தி தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் கர்நாடக அணி, சத்தீஷ்காரை பந்தாடியது.

பெங்களூரு,

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான தமிழக அணி, குஜராத்தை எதிர்கொண்டது. தமிழக அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினும் இடம் பெற்றிருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் அவர் உடனடியாக தமிழக அணியுடன் இணைந்து விட்டார்.

அவுட் பீல்டு ஈரப்பதம் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த தமிழகம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த குஜராத் அணி 9 விக்கெட்டுக்கு 177 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக துருவ் ரவல் 40 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் பார்த்தீவ் பட்டேல் (13 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. தமிழகம் தரப்பில் முகமது 3 விக்கெட் கைப்பற்றினார். அஸ்வின் 8 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

தொடர்ந்து விளையாடிய தமிழக அணி தொடக்கத்தில் தடுமாறியது. முரளிவிஜய் (3 ரன்), பாபா அபராஜித் (6 ரன்), விஜய் சங்கர் (6 ரன்) ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதன் பின்னர் அபினவ் முகுந்த் (32 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (47 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பு அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்க உதவியது.

இருப்பினும் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாருக்கான், கடைசி 3 ஓவர்களில் 3 சிக்சர்கள் பறக்க விட்டு அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார். தமிழக அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஷாருக்கான் 56 ரன்களுடனும் (46 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுடனும் (43 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

மற்றொரு அரைஇறுதியில் கர்நாடகா - சத்தீஷ்கார் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சத்தீஷ்கார் 49.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அடுத்து களம் இறங்கி சத்தீஷ்காரின் பந்து வீச்சை துவம்சம் செய்த கர்நாடக அணி 40 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. தேவ்தத் படிக்கல் 92 ரன்களில் (98 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) போல்டு ஆனார். லோகேஷ் ராகுல் 88 ரன்களுடனும் (111 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 47 ரன்களும் (33 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அவுட் ஆகாமல் இருந்தனர். டெஸ்ட் தொடரில் அசத்திய மயங்க் அகர்வால் சொந்த ஊர் அணிக்கு திரும்பியிருப்பது கர்நாடகாவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கும் இறுதி ஆட்டத்தில் தமிழகம்-கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story