கிரிக்கெட்

விரைவில் ஓய்வு பெறுவார்: “டோனி குறித்து விமர்சிக்காதீர்கள்” - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி + "||" + Will retire soon Don't criticize Tony Interview with Coach Ravisastri

விரைவில் ஓய்வு பெறுவார்: “டோனி குறித்து விமர்சிக்காதீர்கள்” - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

விரைவில் ஓய்வு பெறுவார்: “டோனி குறித்து விமர்சிக்காதீர்கள்” - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு உண்டு ஆதலால் டோனி குறித்து விமர்சிக்காதீர்கள் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார்.
மும்பை, 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘மூத்த வீரர் டோனி குறித்து இப்போது நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்களே?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து ரவிசாஸ்திரி கூறியதாவது:-

டோனி குறித்து பேசுபவர்களில் பாதி பேருக்கு அவர்களது ஷூவின் லேஸ் கூட கட்டத் தெரியாது. தேசிய அணிக்காக டோனி செய்துள்ள சாதனையை பாருங்கள். டோனி கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் ஏன் அவசரப்படுகிறார்கள்? ஒருவேளை அவர்களுக்கு பேசுவதற்கு வேறு விஷயங்கள் இல்லாமல் இருக்கலாம். டோனி விரைவில் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்று விடுவார் என்பதை அவர் உள்பட அனைவரும் அறிவர். அது எப்போது நடக்குமோ அப்போது நடக்கட்டும். அவர் பற்றி தேவையில்லாமல் விமர்சிப்பது, அவரை அவமதிக்கும் செயலாகும்.

இந்திய அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடியுள்ள அவருக்கு ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்பது தெரியாதா? டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போது என்ன சொன்னார். விக்கெட் கீப்பிங் பணியை விருத்திமான் சஹாவிடம் வழங்கும் அளவுக்கு நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். அவரது கணிப்பு சரியாக அமைந்தது.

சமீபத்தில் ராஞ்சியில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது வீரர்களின் ஓய்வறைக்கு வந்த டோனி, அறிமுக வீரராக களம் இறங்கிய உள்ளூர் வீரர் ஷபாஸ் நதீமை சந்தித்து அவரை ஊக்குவிக்கும் வகையில் பேசி விட்டு சென்றார். எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை எடுக்கும் உரிமை டோனிக்கு உண்டு. அதனால் அவர் பற்றிய இத்தகைய விவாதங்கள் முழுமையாக முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.