பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் தெண்டுல்கர் சொல்கிறார்


பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் தெண்டுல்கர் சொல்கிறார்
x
தினத்தந்தி 31 Oct 2019 10:52 PM GMT (Updated: 31 Oct 2019 10:52 PM GMT)

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா-வங்காளதேசம் மோதும் இந்த டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பனிப்பொழிவு பிரச்சினை இல்லாத வரைக்கும் பகல்- இரவு டெஸ்ட் கிரிக்கெட் நல்ல முயற்சி தான். ஆனால் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தால் அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் கடும் சவாலாக அமையும். ஏனெனில் பனியால் பந்து ஈரப்பதமாகும் போது, பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் போட்டியின் போது பனிப்பொழிவு இல்லை என்றால், இது சிறப்பு வாய்ந்த போட்டியாக இருக்கும்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மின்னொளியின் கீழ் விளையாடும் போது பனிப்பொழிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதுகிறேன். பனிப்பொழிவு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் அறிய வேண்டியது அவசியமாகும். இரு அணிகளும் களத்தில் எந்த அளவுக்கு சவாலாக இருக்கப்போகின்றன என்பதை பனிதான் தீர்மானிக்கும். சீதோஷ்ண நிலை போட்டியின் உத்வேகத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நான் இரண்டு விதமான கோணங்களில் பார்க்கிறேன். ஒன்று, பொதுமக்கள் தங்களது வேலையை முடித்து விட்டு மாலையில் நேரில் வந்து போட்டியை பார்த்து உற்சாகமாக ரசிக்க முடியும். அந்த வகையில் இது நல்ல விஷயமாகும். இரண்டாவது வீரர்களின் பார்வையில் நோக்கும் போது, இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்தில் விளையாடுவது என்பது ஒன்றும் மோசமான யோசனை கிடையாது. வழக்கமான சிவப்பு நிற பந்தில் இருந்து இது எப்படி மாறுபடுகிறது என்பதை நம்மை சோதித்துக் கொள்ளலாம்.

வீரர்கள் வலை பயிற்சியின் போது வெவ்வேறு தன்மையுடைய பந்துகளில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிய பிங்க் நிற பந்து, ஏற்கனவே 20 ஓவர், 50 ஓவர், 80 ஓவர்கள் வரை பயன்படுத்தப்பட்ட பிங்க் பந்துகளை கொண்டு பயிற்சி எடுக்க வேண்டும். அதாவது புதிய பந்து, ஓரளவு பழசான பந்து, முற்றிலும் பழசான பந்து இவற்றின் தன்மை எப்படி இருக்கிறது என்பதை கணித்து, அதற்கு ஏற்ப வியூகங்களை தீட்ட வேண்டும்.

ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருக்கும் போது, பிங்க் பந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கணிசமாக ஒத்துழைக்கும். சுழற்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை முதலில் ஆடுகளத்தில் பந்து எந்த அளவுக்கு பவுன்ஸ் ஆகிறது, எப்படி சுழன்று திரும்புகிறது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு ஏற்ப பவுலிங் செய்தால் அசத்தலாம்.

இதே போல் இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பர்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கப்போகிறார்கள். அவர்கள் ஆடுகளத்தில் பந்து எழும்பி செல்கிறதா அல்லது பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவாக வருகிறதா என்பதை கணித்து, அதன் மூலம் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.

Next Story