தியோதர் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்திய ‘சி’ அணி


தியோதர் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்திய ‘சி’ அணி
x
தினத்தந்தி 1 Nov 2019 11:35 PM GMT (Updated: 1 Nov 2019 11:35 PM GMT)

தியோதர் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு இந்திய ‘சி’ அணி தகுதிபெற்றது. அந்த அணியின் சார்பில் சுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் சதம் விளாசினர்.

ராஞ்சி,

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் சுப்மான் கில் தலைமையிலான இந்திய ‘சி’ அணி, ஹனுமா விஹாரி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய ‘சி’ பேட்ஸ்மேன்கள், எதிரணியின் பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினர். குறிப்பாக ரன் மழை பொழிந்த தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் (120 ரன், 111 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் சுப்மான் கில் (143 ரன், 142 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) இருவரும் சதம் அடித்தனர். ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் சுப்மான் கில்லின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி அமர்க்களப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய ‘சி’ அணி 3 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய ‘ஏ’ அணி 29.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இந்திய ‘சி’ அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 2-வது தோல்வியை தழுவிய இந்திய ஏ அணி வெளியேற்றப்பட்டது. ‘சி’ அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜலஜ் சக்சேனா 41 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார். தியோதர் கோப்பை கிரிக்கெட்டில் ஒரு பவுலரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இன்று நடக்கும் 3-வது லீக்கில் இந்தியா சி-இந்தியா பி அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு இவ்விரு அணிகளும் 4-ந்தேதி இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கின்றன.


Next Story