இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - டெல்லியில் இன்று நடக்கிறது


இந்தியா-வங்காளதேசம் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - டெல்லியில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 2 Nov 2019 11:18 PM GMT (Updated: 2 Nov 2019 11:18 PM GMT)

காற்று மாசுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டுகளில் பங்கேற்கிறது.

முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணியில், கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்துகிறார். விராட் கோலியின் இடத்தில் லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவர் களம் இறங்குவார். ஹர்திக் பாண்ட்யா காயத்தால் ஓய்வில் இருப்பதால் அவரது இடத்தை நிரப்பும் வகையில் மும்பையைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் 26 வயதான ஷிவம் துபே அழைக்கப்பட்டார். ‘சரவெடி’ பேட்டிங்கோடு மிதவேகமாக பந்து வீசக்கூடியவர். இந்த ஆட்டத்தில் அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்பதை கேப்டன் ரோகித் சர்மா சூசகமாக கூறியுள்ளார். யுஸ்வேந்திர சாஹல் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் வெளியே உட்கார வைக்கப்படலாம்.



 


 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை அடையாளம் காண்பதில் இந்திய அணி நிர்வாகம் இப்போதே தீவிரம் காட்ட தொடங்கி விட்டது. இதனால் இளம் வீரர்கள் தங்களுக்குரிய வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ள முயற்சிப்பார்கள். வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியா வலிமையான அணியாக இருப்பதால் தொடரை வெற்றியோடு தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

வங்காளதேச அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் தவிக்கிறது. சூதாட்ட தரகர் அணுகியதை மறைத்த குற்றத்துக்காக கேப்டனும், ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடக்க அதிரடி ஆட்டக்காரர் தமிம் இக்பால் தனிப்பட்ட காரணத்துக்காக இந்திய பயணத்தில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். மூத்த வீரர் மோர்தசா ஓய்வு பெற்று விட்டார்.

வங்காளதேச அணி கேப்டன் மக்முதுல்லா, சவுமியா சர்கார், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், லிட்டான் தாஸ், வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் ஆகியோரைத் தான் மலைபோல் நம்பியுள்ளது. இவர்கள் சோபிக்காவிட்டால் வங்காளதேச அணி நிலைமை கந்தலாகி விடும்.

இவ்விரு அணிகளும் இதற்கு முன்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இவை அனைத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கின்றது. இதனால் வரலாறு படைக்கும் முனைப்புடன் வங்காளதேச அணி வீரர்கள் வியூகங்கள் வகுத்துள்ளனர்.

டெல்லியில் காற்றின் மாசு அபாயகரமான அளவை தாண்டி விட்டது. அங்கு எங்கு, பார்த்தாலும் புகைமூட்டமாகவே காட்சி அளிக்கிறது. வங்காளதேச அணியில் பெரும்பாலான வீரர்கள் சுவாச கவசம் அணிந்தபடி பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றைய ஆட்டத்தில், பீல்டிங்கின் போதும் இத்தகைய கவசம் அணிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இது தான் கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. மின்னொளியின் கீழ் போட்டி நடந்தாலும் காற்று மாசுவின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அதை சமாளித்து வீரர்கள் எப்படி ஆடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்த மைதானத்தில் இதுவரை ஐந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறது. 2017-ம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்தியா 202 ரன்கள் குவித்ததுடன், 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடுகளத்தன்மையை பொறுத்தமட்டில் பேட்டிங்குக்கும், போக, போக ஓரளவு சுழற்பந்து வீச்சுக்கும் ஒத்துழைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

வங்காளதேசம்: லிட்டான் தாஸ், சவுமியா சர்கார், முகமது நைம் அல்லது முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்),மக்முதுல்லா (கேப்டன்), மொசாடெக் ஹூசைன், அபிப் ஹூசைன், அராபத் சன்னி, முஸ்தாபிஜூர் ரகுமான், அல்- அமின் ஹூசைன், அபு ஹைதர் அல்லது தைஜூல் இஸ்லாம்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

1000-வது போட்டி

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இன்றைய இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான மோதல், 1000-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக பாகிஸ்தான் 146 ஆட்டங்களில் ஆடியுள்ளது. இந்திய அணியை எடுத்துக் கொண்டால் 120 ஆட்டங்களில் விளையாடி 74-ல் வெற்றியும், 42-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவில்லை.



 


 ‘வங்காளதேச அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்’- ரோகித் சர்மா

முதலாவது ஆட்டத்திற்கு முன்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எல்லா வகையிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஸ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து சோதித்து பார்க்க இதுவே உகந்த நேரமாகும். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கும், சர்வதேச போட்டிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஐ.பி.எல்.-ல் நீங்கள் முன்வரிசையில் பேட்டிங் செய்து இருப்பீர்கள். சர்வதேச போட்டியில் அது தான் சவாலான விஷயமாகும். நீங்கள் விரும்பிய இடத்தில் இறங்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் ஐ.பி.எல்.-ல் ஒரு சீசனில் 15 ஆட்டங்களில் ஆட முடியும். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சோதனை முயற்சி ஒரு பக்கம் இருந்தாலும், போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு தான் முதலில் முன்னுரிமை கொடுப்போம்.

கேப்டன்ஷிப்பை பொறுத்தமட்டில் எனது பணி எளிதானது. நான் நிரந்தர கேப்டன் கிடையாது. விராட் கோலி விட்ட இடத்தில் இருந்து அணியை முன்னெடுத்து செல்வது தான் எனது பணி. அதாவது முந்தைய தொடரில் விராட் கோலி என்ன செய்தாரோ அதை தொடர வேண்டும் அவ்வளவு தான்.

வங்காளதேசம் சிறந்த அணி. உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி நன்றாக விளையாடி இருக்கிறது. எங்களுக்கு எதிராக விளையாடிய போது எப்போதும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். அந்த அணியில் இரண்டு முன்னணி வீரர்கள் இல்லை என்பது தெரியும். ஆனாலும் தரமான அணியாகவே இருக்கிறது. அவர்களுக்குரிய நாளாக அமைந்தால் எந்த அணியையும் வீழ்த்தி விடுவார்கள். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.




 


 ‘முழு கவனமும் கிரிக்கெட் மீது தான் உள்ளது’- மக்முதுல்லா

வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லா கூறியதாவது:-

எங்கள் அணியில் நேசத்திற்குரிய ஒரு வீரர் ஷகிப் அல்-ஹசன். இப்போதும் அவரை விரும்புகிறோம். அது தொடரும். தடை காலம் முடிந்து அவர் அணிக்கு திரும்பும் போது, இருகரம் நீட்டி வரவேற்போம். அவர் தவறு செய்தது உண்மை தான். ஆனால் அவர் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்து விடவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஷகிப் அல்-ஹசன் விவகாரம் முடிந்து போய் விட்டது. எனவே எங்களது கவனம் இப்போது நாளைய (இன்று) போட்டியில் வெற்றி பெறுவதில் தான் இருக்கிறது. இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அணியில் நிலைநிறுத்திக் கொள்ள இது நல்ல வாய்ப்பாகும்.

இங்குள்ள சீதோஷ்ண நிலை (காற்று மாசு) குறித்து நிறைய விவாதித்து விட்டோம். அதை கட்டுப்படுத்துவது நமது கையில் இல்லை. காற்று மாசுப்பாட்டை விட கிரிக்கெட் மீது தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம். கடந்த 3 நாட்களாக இங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளோம். இங்குள்ள சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். இவ்வாறு மக்முதுல்லா கூறினார்.


Next Story