கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் தோற்றது இந்தியா + "||" + First 20-over cricket: Bangladesh win

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் தோற்றது இந்தியா

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் தோற்றது இந்தியா
டெல்லியில் நேற்று நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, காற்று மாசுபாட்டில் சிக்கி தவிக்கும் தலைநகர் டெல்லியில் நேற்றிரவு நடந்தது. சர்வதேச அளவில் இது 1000-வது 20 ஓவர் ஆட்டமாகும். இந்திய அணியில் அறிமுக வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே இடம் பிடித்தார். இவர் இந்தியாவின் 82-வது சர்வதேச 20 ஓவர் போட்டி வீரர் ஆவார். ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேச கேப்டன் மக்முதுல்லா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார்.


காற்று மாசுபாட்டினால் புகைமூட்டம் ஓரளவு காணப்பட்ட போதிலும் அதிர்ஷ்டவசமாக அதனால் ஆட்டத்தில் பாதிப்பு ஏதும் இல்லை. 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.

இவர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். பவுண்டரியுடன் இன்னிங்சை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா, மேலும் ஒரு பவுண்டரி அடித்து விட்டு அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. ரோகித் சர்மா 9 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து லோகேஷ் ராகுல் வந்தார்.

மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில், வங்காளதேச பவுலர்களின் சாதுர்யமான பந்து வீச்சு காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினர். குறிப்பாக தவானின் பேட்டிங் மந்தமாக இருந்தது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் 15 ரன்னில் கேட்ச் ஆனார்.

3-வது விக்கெட்டுக்கு அடியெடுத்து வைத்த ஸ்ரேயாஸ் அய்யர் 2 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரது பேட்டிங்குக்கு ஆயுசு குறைவு தான். மீண்டும் சிக்சருக்கு முயற்சித்த ஸ்ரேயாஸ் அய்யர் (22 ரன், 13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆகிப்போனார்.

இதன் பின்னர் ஷிகர் தவானுடன், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கைகோர்த்தார். நிதானமாக ஆடிய ஷிகர் தவான் (41 ரன், 42 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட்டில் வெளியேற்றப்பட்டார். புதுமுக வீரர் ஷிவம் துபே (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ரிஷாப் பண்டின் (27 ரன், 26 பந்து, 3 பவுண்டரி) பேட்டிங்கிலும் எழுச்சி இல்லை. இதனால் ரன்வேகம் வெகுவாக தளர்ந்தது. வங்காளதேச கேப்டன் 8 பவுலர்களை பயன்படுத்தி இந்தியாவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். 


 நல்லவேளையாக ஆல்- ரவுண்டர்களான குருணல் பாண்ட்யாவும், தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரும் இறுதிகட்டத்தில் சவாலான ஸ்கோரை எட்ட உதவினர். வாஷிங்டன் சுந்தர் 2 சிக்சரும், குருணல் பாண்ட்யா ஒரு சிக்சரும் பறக்க விட்டு பிரமாதப்படுத்தினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் 30 ரன்களை திரட்டினர். குருணல் பாண்ட்யா 15 ரன்னுடனும் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் 14 ரன்னுடனும் (5 பந்து, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

பின்னர் 149 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி முதல் ஓவரிலேயே லிட்டான் தாசின் (7 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தது. இதன் பின்னர் முகமது நைமும், சவுமியா சர்காரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 54 ரன்களை எட்டிய போது முகமது நைம் 26 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் இறங்கினார். வங்காளதேச அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அவர்களின் ரன்ரேட் கொஞ்சம் குறைந்தாலும் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அது தான் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. விக்கெட் கைவசம் இருந்ததால் அவர்கள் நம்பிக்கையுடன் போராடினர். சவுமியா சர்கார் தனது பங்குக்கு 39 ரன்கள் எடுத்த நிலையில் கிளன் போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து கேப்டன் மக்முதுல்லா வந்தார்.

கடைசி 3 ஓவர்களில் வங்காளதேசத்தின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசினார். இந்த ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை ஓடவிட்டு இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியதுடன் தனது அரைசதத்தையும் கடந்தார்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 4 ரன்களே தேவைப்பட்டது. இதில் மக்முதுல்லா விளாசிய சிக்சரோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்களுடனும் (43 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), மக்முதுல்லா 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முஷ்பிகுர் ரஹிம் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 


 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச அணியின் முதலாவது வெற்றி இதுவாகும். இத்தனைக்கும் ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால் ஆகிய முன்னணி வீரர்கள் இல்லாமலேயே சாதித்து இருக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வங்காளதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 7-ந்தேதி ராஜ்கோட்டில் நடக்கிறது.

வாய்ப்புகளை நழுவ விட்ட இந்தியா

இந்த ஆட்டத்தில் வங்காளதேச அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹிம் 38 ரன்னில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ‘டீப் மிட் விக்கெட்’ திசையில் எல்லைக்கோடு அருகே குருணல் பாண்ட்யா கோட்டை விட்டார். பந்து அவரது கையில் பட்டு தெறித்து பவுண்டரிக்கு ஓடியது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

முன்னதாக முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். ஆனால் நடுவர் விரலை உயர்த்தவில்லை. ஏனோ இந்திய கேப்டன் ரோகித் சர்மா, டி.ஆர்.எஸ். கோரவில்லை. டி.வி. ரீப்ளேயை பார்த்த போது பந்து மிடில் ஸ்டம்பை துல்லியமாக தாக்குவது தெரிந்தது. டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை இந்தியா கேட்டிருந்தால் அப்போதே முஷ்பிகுர் ரஹிம் வெளியேறி இருப்பார்.

கோலியை முந்தினார், ரோகித் சர்மா

இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே விக்கெட்டை தாரைவார்த்தாலும் புதிய மைல்கல்லை எட்டினார். 9 ரன் எடுத்த அவர், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலியிடம் இருந்து தட்டிப்பறித்தார். 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா இதுவரை 2,452 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி 2,450 ரன்களுடன் (72 ஆட்டம்) 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்ற இந்தியர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றார். இது ரோகித் சர்மாவின் 99-வது ஆட்டம். டோனி 98 ஆட்டங்களில் ஆடியதே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இந்த சாதனை பட்டியலில் ரோகித் சர்மா, பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடியுடன் (99 ஆட்டம்) சமநிலையில் உள்ளார். இவர்களுக்கு முன்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் (111 ஆட்டம்) மட்டுமே இருக்கிறார்.

முதல்முறையாக தோல்வி

20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராக விளையாடிய 8 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை சுருட்டியது ஆஸ்திரேலியா
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்காவை 89 ரன்னில் சுருட்டி அசத்தியது. சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.