ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - அட்டவணை வெளியீடு


ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 3 Nov 2019 11:51 PM GMT (Updated: 3 Nov 2019 11:51 PM GMT)

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் டாப்-6 இடங்களை பிடித்த நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த அண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.

இதன்படி ‘ஏ’ பிரிவில் இலங்கை, பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, நமிபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. அக்டோபர் 18-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர்12 சுற்றிலும் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இரு லீக் சுற்று அணிகள், மற்றொரு பிரிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இரு லீக் சுற்று அணிகள் அங்கம் வகிக்கின்றன.

முன்னாள் சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை அக்டோபர் 24-ந்தேதி பெர்த்தில் சந்திக்கிறது. அதே நாளில் சிட்னியில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

சூப்பர்12 சுற்றில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும். இறுதிப்போட்டி 2020-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி மெல்போர்னில் அரங்கேறுகிறது.


Next Story