‘பீல்டிங், அப்பீலில் செய்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்’ - கேப்டன் ரோகித் சர்மா கருத்து


‘பீல்டிங், அப்பீலில் செய்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்’ - கேப்டன் ரோகித் சர்மா கருத்து
x
தினத்தந்தி 4 Nov 2019 11:53 PM GMT (Updated: 4 Nov 2019 11:53 PM GMT)

‘வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பீல்டிங் மற்றும் அப்பீலில் செய்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்’ என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சர்வதேச அளவில் அரங்கேறிய இந்த 1000-வது 20 ஓவர் போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்தியாவுக்கு எதிராக 9-வது 20 ஓவர் போட்டியில் ஆடிய வங்காளதேச அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கினார். டி.ஆர்.எஸ். அப்பீலை சரியான சமயத்தில் செய்யாததும், தவறான தருணத்தில் அப்பீல் செய்ததும், முஷ்பிகுர் ரஹிமின் கேட்ச் வாய்ப்பை குருணல் பாண்ட்யா கோட்டை விட்டதும் இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த போட்டியில் வெற்றிக்கு தகுதியான முறையில் வங்காளதேச அணியினர் நன்றாக செயல்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசி நெருக்கடி அளித்ததுடன் விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 148 ரன்கள் வெற்றிக்கு போதுமான ஸ்கோர் தான். டி.ஆர்.எஸ். அப்பீலின் போது சில முடிவுகளை நாங்கள் தவறாக எடுத்து விட்டோம். மோசமான பீல்டிங்கும், அப்பீல் செய்கையில் சரியாக கணிக்காமல் செயல்பட்டதும் எங்கள் தோல்விக்கு காரணமாகும்.

பீல்டிங்கின் போது கேப்டன் சரியான இடத்தில் இல்லாத நேரத்தில் பந்து வீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் சொல்வதை நம்பி தான் அப்பீல் செய்வது வழக்கமாகும். விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் இளம் வீரர். அவருக்கு அதிக போட்டியில் ஆடிய அனுபவம் கிடையாது. அவர் முடிவுகளை சரியாக கணிக்க சற்று காலம் பிடிக்க தான் செய்யும். அதற்கு நாம் அவருக்கு காலஅவகாசம் அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

முதல் ஓவரில் விக்கெட்டை இழக்கும் போது அதிக ரன் குவிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டதாக இருந்தது. இதனால் அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்தால் 140-150 ரன்கள் எடுத்தால் போதுமானதாக இருக்கும் என்று நினைத்து தான் ஆடினோம். எங்கள் அணியில் இடம் பிடித்து இருப்பவர்கள் இளம் வீரர்கள். எனவே இதுபோன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து செயல்பட சற்று காலம் பிடிக்கும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் போதுமான அளவுக்கு ரன் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் இது சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர் தான். ஆனால் இந்த ஸ்கோருக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது முக்கியமானதாகும். ஆனால் வங்காளதேச அணியினர் நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாகும்.

நமது இளம் பந்து வீச்சாளர்கள் நன்றாகவே செயல்பட்டார்கள். சிறிய ஸ்கோருக்குள் எதிரணியை மடக்க சரியான திட்டத்துடன் பந்து வீச வேண்டியது அவசியமானதாகும். நமது பவுலர்கள் இந்த போட்டியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார்கள். 20 ஓவர் போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் நமது அணிக்கு மிகவும் முக்கியமானவர். மிடில் ஓவர்களில் நிலைத்து நின்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் நம்பிக்கையுடன் பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட் வீழ்த்தவும் தெரிந்தவர். அவர் அணியில் இருந்தால் கேப்டனின் பணி சற்று எளிதாக அமையும். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

மக்முதுல்லா கருத்து

வெற்றி குறித்து வங்காளதேச அணியின் கேப்டன் மக்முதுல்லா கருத்து தெரிவிக்கையில், ‘போட்டியை எப்படி தொடங்குகிறோம் என்பதை பொறுத்தே எல்லாம் அமைகிறது. எங்கள் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணியை கட்டுப்படுத்தினார்கள். எங்கள் அணியின் பீல்டிங் நன்றாக இருந்தது. எல்லோரும் நல்ல பங்களிப்பை அளித்தனர். பேட்ஸ்மேன்களும் நல்ல உத்வேகத்துடன் விளையாடினார்கள். வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் கேப்டனின் பணி எளிதானது. முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்கார் நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை அளித்தனர். அறிமுக போட்டியிலேயே முகமது நைம் நன்றாக விளையாடினார்’ என்றார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற வங்காளதேச அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அளித்த பேட்டியில், ‘இந்தியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் வெற்றியை நெருங்கி வந்து நாங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். இதனால் அடுத்த முறை இந்தியாவுக்கு எதிராக எந்த போட்டியில் விளையாடினாலும் அதில் தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற உறுதியுடன் களம் கண்டோம். எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த 2 வாரம் மிகவும் கடினமானதாக (வங்காளதேச வீரர்கள் போராட்டம், ஷகிப் அல்-ஹசன் தடை) இருந்தது. சில போட்டிகளில் வெற்றி பெற்றால் எல்லாம் சரியான பாதைக்கு வந்து விடும் என்று வங்காளதேசத்தில் இருந்து புறப்படும் முன்பு நான் தெரிவித்து இருந்தேன். அதன்படி நாங்கள் இந்த ஆட்டத்தில் வென்று இருக்கிறோம். இந்த பார்ம் தொடர முயற்சிப்போம். கடைசி ஓவர் வரை சென்ற இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் இருந்து நாங்கள் நிறைய கற்று இருக்கிறோம். இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு வருவது எப்படி? என்பது குறித்து நாங்கள் ஆலோசனை செய்தோம். பெரிய ஷாட் அடித்து ஆடுவதை விட ஒன்று, இரண்டு ரன்களாக எடுத்து ஆடினால் இந்த நிலையை மாற்ற முடியும் என்று மக்முதுல்லாவிடம் தெரிவித்தேன். இந்த போட்டி தொடரில் எங்களுக்கு இழக்க எதுவும் இல்லை என்ற மனநிலையுடன் தான் வந்துள்ளோம். இதன் மூலம் எங்கள் திறமைக்கு தகுந்தபடி சுதந்திரமாக அச்சமின்றி விளையாட முடியும். இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் போட்டியில் நாங்கள் முதல்முறையாக வென்று இருப்பது சிறப்பான தருணமாகும். முக்கியமான 2 வீரர்கள் (ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால்) இல்லாத நிலையில் இளம் வீரர்களை வைத்து இந்திய அணியை நாங்கள் வீழ்த்தி இருப்பது அருமையான வெற்றியாகும். வங்காளதேச அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார்.


Next Story