கிரிக்கெட்

வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது + "||" + Will India retaliate against Bangladesh team? - The 2nd Twenty20 over is taking place in Rajkot today

வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது

வங்காளதேச அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? - 2வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது
மழை மிரட்டலுக்கு மத்தியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்றிரவு நடக்கிறது.
ராஜ்கோட்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.


ஷகிப் அல்-ஹசன், தமிம் இக்பால் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இல்லாமல் வங்காளதேசம் பலவீனமாகி விட்டது என்று வர்ணிக்கப்பட்ட நிலையில் எழுச்சி பெற்ற அந்த அணி முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து விட்டது.

இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எட்டு 20 ஓவர் ஆட்டங்களிலும் தோற்று இருந்த வங்காளதேசம் முதல் முறையாக வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

தொடக்க ஆட்டத்தை பொறுத்தவரை இந்தியாவின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. நீண்ட நேரம் களத்தில் நின்ற ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பண்டுவின் பேட்டிங் மந்தமாக காணப்பட்டது. இதனால் தான் 150 ரன்களை கூட தொட முடியாமல் போனது.

பந்து வீச்சில் 17 ஓவர்கள் வரை இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. முஷ்பிகுர் ரஹிமுக்கு 38 ரன்னில் நழுவ விட்ட கேட்ச்சும், அதற்கு முன்பாக எல்.பி.டபிள்யூ. அப்பீலின் போது டி.ஆர்.எஸ். கேட்காததும் தோல்விக்கு காரணியாக அமைந்தது. ரிஷாப் பண்டுவின் விக்கெட் கீப்பிங் பணி தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வந்தாலும், அவரை கழற்றி விட வாய்ப்பில்லை. கடந்த ஆட்டத்தில் அறிமுக வீராக இறங்கிய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஜொலிக்கவில்லை. இருப்பினும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதே சமயம் 4 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவுக்கு பதலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்படலாம். மொத்தத்தில் வங்காளதேசத்துக்கு சுடச்சுட பதிலடி கொடுக்க ஒருங்கிணைந்த ஆட்டம் அவசியமாகும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய வீரர்கள் முழுவீச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

வீரர்களின் போராட்டம், ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு தடை என்று பல சிக்கல்களை கடந்து இந்தியாவுக்கு பயணித்த வங்காளதேச அணிக்கு முதலாவது வெற்றி உற்சாகமும், நம்பிக்கையும் அளித்துள்ளது. விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் 60 ரன்கள் விளாசி ஹீரோவாக மின்னினார். இந்த ஆட்டத்திலும் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

கேப்டன் மக்முதுல்லா, முந்தைய ஆட்டத்தில் 8 பவுலர்களை பயன்படுத்தி இந்தியாவின் ரன்வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். அவரது வித்தியாசமான யுக்திகள் இன்றைய ஆட்டத்திலும் பலன் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மக்முதுல்லா கூறுகையில், ‘இந்த தொடரை கைப்பற்றினால் அது வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாக இருக்கும். உள்நாட்டில் இந்தியா வலுவான அணி என்பதை அறிவோம். அந்த அணியை வீழ்த்த முதல் பந்தில் இருந்தே உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங்குக்கு உதவிகரமாக இருக்கும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால் 170 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்று நம்புகிறேன். சீதோஷ்ண நிலையை பொறுத்து ஆடும் லெவன் அணியை முடிவு செய்வோம்’ என்றார்.

இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இது 100-வது சர்வதேச 20 ஓவர் போட்டியாகும். ஆட்ட எண்ணிக்கையில் சதம் அடிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமைக்குரிய ரோகித் சர்மா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘எங்களது பேட்டிங்கை பார்க்க நன்றாகத் தான் உள்ளது. அதனால் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் ஆடுகளத்தன்மையை ஆய்வு செய்து விட்டு, அதற்கு ஏற்ப ஒரு அணியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

டெல்லியில் நடந்த கடந்த ஆட்டத்தில் ஆடுகளத்தன்மைக்கு தகுந்தபடி வேகப்பந்து வீச்சு கூட்டணியை தீர்மானித்தோம். அதே போல் இந்த போட்டிக்கும் ஆடுகளத்தை பார்த்து விட்டு, எத்தகைய பந்து வீச்சாளர்கள் தேவை என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.

ராஜ்கோட் ஆடுகளம் (பிட்ச்) எப்போதும் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். அது மட்டுமின்றி பந்து வீச்சாளர்களுக்கும் கொஞ்சம் ஒத்துழைக்கும். நிச்சயம் டெல்லியை விட சிறந்த ஆடுகளமாக இருக்கும். ஆட்ட வியூகம் குறித்து உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் எங்களது அணுகுமுறையில் மாற்றம் இருக்கும். அதை நீங்கள் பார்ப்பீர்கள். கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.

100-வது ஆட்டத்தில் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது ‘2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் அறிமுகம் ஆனேன். இது நீண்டதொரு பயணம். 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டியில் நான் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். இதில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன்.’ என்று குறிப்பிட்டார்.

ராஜ்கோட்டில் இதுவரை இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. 2013-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2017-ம் ஆண்டு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 197 ரன்கள் இலக்கை நெருங்க முடியாமல் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம் அல்லது முகமது மிதுன், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன் அல்லது அராபத் சன்னி.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மழையால் போட்டிக்கு ஆபத்து

இன்றைய ஆட்டம் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளத்தில் கிட்டத்தட்ட புற்கள் முழுமையாக அகற்றப்பட்டு பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்றாலும் வானிலை தான் இப்போது அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ‘மஹா’ புயல் எதிரொலியாக ராஜ்கோட்டில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்த மைதானத்தை நிர்வகிக்கும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஹிமன்ஷூ ஷா கூறுகையில், ‘இன்றைய நாளில் காலைப்பொழுதில் மழை பெய்து, பிற்பகலுக்கு பிறகு மழை பெய்யாமல் இருந்தால் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மைதானத்தில் வடிகால் வசதி வாய்ப்புகள் சிறப்பாக உள்ளது. மேலும் எத்தகைய அவசர நிலையையும் சமாளிக்ககூடிய அனுபவம் வாய்ந்த மைதான ஊழியர்கள் உள்ளனர். மழை கடுமையாக பெய்யக்கூடாது என்பதே எங்களது பிரார்த்தனை. மழைக்கு பிறகு ஆட்டம் தொடங்கினால், அவுட் பீல்டு வேகம் குறைந்து விடும். இத்தகைய சூழலில் ரன் எடுப்பது சுலபமாக இருக்காது. பவுண்டரி அடிப்பது கடினமாகி விடும். ஏனெனில் ஈரப்பதம் காரணமாக அவுட்பீல்டில் பந்து வேகமாக ஓடாது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. "காற்று வழியாக பரவும் கொரோனா" ஒப்புகொண்ட உலக சுகாதாரா அமைப்பு
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான ஆதாரங்களை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது,
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
3. 21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்றார், 100 நாட்களைக் கடந்து விட்டது பிரதமருக்கு சிவசேனா கேள்வி
21 நாட்களில் கொரோனா வைரஸை வென்றுவிடலாம் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், 100 நாட்களைக் கடந்து கொரோனா வைரஸ் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருவது ஏன் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
4. ஒரே நாளில் கொரோனாவை குணமாக்கும் மூலிகை மைசூர்பா; ஒரு நாளைக்கு நான்கு துண்டுகள் சாப்பிட வேண்டும்...?
கோவையில் மூலிகை மைசூர்பா மூலமாக ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் குணமடைவதாக ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் வழங்கிய நோட்டீஸ் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
5. தோனிக்கு இன்று பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.